2013-07-16 15:20:03

கற்றனைத் தூறும் கணிதம் அறிந்தத் தாவரங்கள்


தாவர வகைகள் தமக்குத் தேவையான உணவையும் அதன் சேமிப்பையும் கணக்கிட்டே செய்கின்றன என்று ஓர் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அண்மையில், 'இ-லைஃப் ஜர்னல்' (e-Life Journal) எனும் அறிவியல் இதழில் இது குறித்து எழுதியுள்ள பிரித்தானிய தாவரவியல் ஆய்வாளர்கள், தாவரங்கள் தமது உணவுத் தேவை மற்றும் பயன்பாடு குறித்த கணக்குகளை மேற்கொள்ள தமக்குள்ளேயே ஒரு திறமையைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளனர்.
தாவரங்கள், இரவு நேரங்களில், தமக்கு எந்த அளவுக்கு மாவுச் சத்து தேவை என்பதை, பகல் நேரத்தில் சூரிய ஒளி இருக்கும் வேளையில், மிக நுண்ணியமாகக் கணக்கிட்டு சேமித்து வைத்துக்கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சூரிய ஒளிச் சக்தியைப் பயன்படுத்தி, கரியமில வாயுவை, சர்க்கரை மற்றும் மாவுச் சத்தாக மாற்ற முடியாத இரவு நேரத்தில், அதிகாலை மீண்டும் சூரிய ஒளி வரும் வரையில் தமக்குள்ளே இருக்கும் மாவுச் சத்தை திட்டமிட்டு சீராக பயன்படுத்த வேண்டியத் தேவை தாவரங்களுக்கு உள்ளது.
தாவரங்கள், தமது தேவையை உணர்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தம்மிடம் உள்ள மாவுச் சத்தை பங்கீடு செய்கின்றன என்றால், அவை துல்லியமாக வகுத்தல் கணக்குகளைச் செய்கின்றன என்பதையே Norwichல் உள்ள John Innes மையத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆதாரம் : BBC News / Reuters








All the contents on this site are copyrighted ©.