2013-07-16 15:22:32

கர்தினால் கிரேசியஸ் : அருள்சகோதரி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது மனித சமுதாயத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல்


ஜூலை,16,2013. ஒரிசாவில் இளம் அருள்சகோதரி ஒருவர், கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது மனித சமுதாயத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்று தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்த அருள்சகோதரி, கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது நம் பெண்ணுக்கு எதிரான உடல் மற்றும் உணர்வுரீதியான பயங்கரவாதச் செயல் என்று கடுஞ்சொற்களால் சாடியுள்ளார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இச்செயல், தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ள இளம் பெண்ணுக்குச் செய்யப்பட்ட தீய செயல் என்றும், இப்பாலியல் வன்கொடுமை, பெண்களின் மதிப்புக்கு எதிரான அருவருக்கதக்க குற்றம் மற்றும் வெறுக்கத்தக்க வரம்புமீறிய வெறிச்செயல் என்றும், நமது நாட்டிலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை இச்செயல் பிரதிபலிக்கின்றது என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறியுள்ளார்.
அரசு நிறுவனங்களின் அக்கறையற்ற நிலை திகைக்க வைக்கின்றது எனவும், கந்தமாலில் சட்டமும் ஒழுங்கும் கடுமையாய்ச் சீரழிந்துள்ளன எனவும் குறைகூறியுள்ள கர்தினால் கிரேசியஸ், நாட்டில் பாலியல் வன்செயல்கள் அதிகரித்து வருவது கடும் சமூகப் பிரச்சனை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது உறவினர்களில் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள 28 வயது அருள்சகோதரி விவகாரம் குறித்துக் கண்டித்துப் பேசியுள்ள கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் John Barwa அவர்களும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு காக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.