2013-07-15 15:57:36

வாரம் ஓர் அலசல் – உறங்கா நெருப்பு


ஜூலை,15,2013. RealAudioMP3 அண்மைக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டதாகப் பேசப்பட்ட இளவரசன்-திவ்யா காதல் திருமணத்தின் எதிரொலி, கடந்த எட்டு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் இரு சாதிகளிடையே வெறுப்பு நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. இந்த விவகாரம், ஒரு சாதியினரிடையே பற்றவைத்த வெறுப்புநெருப்பில் பொருள் சேதங்களும் ஆள் சேதங்களும், மனக்காயங்களும் ஏற்பட்டன. இந்தக் காழ்ப்புநெருப்பின் உச்சகட்டமாக இளவரசன் கடந்த 4ம் தேதி அங்குள்ள இரயில்வே தண்டவாளப் பகுதியில் இறந்து கிடந்தார். அதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் ஆயிரக்கணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இஞ்ஞாயிறன்று இளவரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நூற்றாண்டு உருவாக்கிய விழுமியங்கள், நெறிகள் எதிலும் நம்பிக்கையற்ற மனிதர்களுக்கும், இந்நூற்றாண்டு உருவாக்கிய அறத்தை நம்பிய இரு புதிய தலைமுறையினருக்கும் இடையே இடம்பெற்ற வன்முறைப் போர் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என நம்புவோம். இதுபோன்ற வெறுப்புநெருப்பை இனி தமிழகத்தில் எரியவிடமாட்டோம் என உறுதி எடுப்போம். நல் மாற்றத்துக்கு வித்திடும் புதிய தலைமுறைகளின் சீரிய சிந்தனைகளை வரவேற்போம்.
அன்பு நேயர்களே, சமுதாயத்தின் நல்மாற்றத்துக்கு வித்திட்டுள்ள இன்றைய உலகின் புதிய தலைமுறையின் குரல் ஒன்று கடந்த வாரத்தில் உலகினர் அனைவரையுமே ஏறிட்டுப் பார்க்க வைத்துள்ளது. அந்த இளம்சிட்டின் பிறந்தநாளையே ஓர் உலக தினமாக அறிவித்து அக்குரலுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது உலக சமுதாயம். இவ்வாறு உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளவர் பாகிஸ்தான் நாட்டு 16 வயதுச் சிறுமி மலாலா யூசுப்சாய். இந்தச் சிறுமியின் பிறந்த நாளான ஜூலை 12, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இளைஞர் அமர்வில் மலாலா ஆற்றிய 17 நிமிடங்களுக்கு மேலான உரையின்போது தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டி அச்சிறுமியை ஊக்கப்படுத்தினர். ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் Gordon Brown உள்ளிட்ட பல தலைவர்கள் அமர்ந்திருந்த அந்த அரங்கத்தில் மலாலா பேசியது என்ன....
RealAudioMP3 “என்மீது அன்பு வைத்து நான் விரைவாகக் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பிரார்த்தனைகள் என்னை வலுப்படுத்தியுள்ளன. மலாலா தினம் எனது நாள் அல்ல. தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின், ஒவ்வொரு சிறுவனின், ஒவ்வொரு சிறுமியின் நாளாகும். தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களால் தாக்கப்பட்டதில் நானும் ஒருவர். இன்று நான் எனக்காகப் பேசவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பேசுகிறேன். தலிபான்களின் துப்பாக்கிக் குண்டுகள் நம் வாயை அடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, ஆயிரக்கணக்கானப் புதிய குரல்களை அவை பிறக்க வைத்துள்ளன. பலவீனமும், நம்பிக்கையின்மையும், பயமும் இறந்து, சக்தியும், வலிமையும், துணிச்சலும் பிறந்துள்ள RealAudioMP3 ன. நான் அதே மலாலாவாகத் தான் இருக்கிறேன். எனது நோக்கங்கள், நம்பிக்கை, கனவு எல்லாம் ஒன்றுதான். நான் எந்தத் தனி நபருக்கும் எதிராகப் பேசவில்லை. தலிபான்களுக்கு எதிராக நான் பேச வரவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்க உரிமை உள்ளது என்றுதான் பேச வந்திருக்கிறேன். என்னைத் தாக்கிய தலிபான்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் மகன்களுக்கும், மகள்களுக்கும் கல்வி வேண்டும். இந்த இரக்க உணர்வை முகமது நபிகள், இயேசு கிறிஸ்து, புத்தர், மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா மற்றும் முகமது அலி ஜின்னாவிடம் இருந்து படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி, அன்னை தெரசா மற்றும் எனது தாய் தந்தையிடம் கற்றுக்கொண்டதும் இதுதான். அமைதியையும், பிறரையும் அன்புகூர வேண்டும் என்றுதான் எனது ஆன்மா சொல்கிறது. கூர்மையான வாளைவிட பேனாமுனை சக்திவாய்ந்தது என்பார்கள். எனவேதான் பயங்கரவாதிகள் கல்வியைக்கண்டு, பெண்களின் சம உரிமையைக் கண்டு அஞ்சுகின்றனர். அனைத்து அரசுகளும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவதுடன் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். அனைத்துச் சமுதாயத்தினரும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். சாதி, மதம், பாகுபாடு, நிறம் அல்லது பாலினம் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதைப் புறக்கணிக்க வேண்டும். பெண்கள் அமைதியாகவும் சமத்துவத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அமைதி மற்றும் கல்விக்கான நமது பயணம் தொடரும். வறுமை மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்கு கல்வி மட்டும்தான் ஒரே தீர்வு”. RealAudioMP3
இப்படி ஐ.நா.வில் உரையாற்றிய மலாலா யூசுப்சாய் யார்? பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையாக இருப்பது ஸ்வாட் பள்ளத்தாக்கு. கைபர் கணவாய் அமைந்துள்ள இப்பகுதியில் 1997ம் ஆண்டில் பிறந்தவர் மலாலா. யூசுப்சாய் என்பது அப்பகுதி பெரும்பான்மை பழங்குடி இன மக்களின் குலப்பெயர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டால் தலிபான்கள், தங்களது முழுமையான ஆதிக்கத்தை இழந்துவிட்டாலும், ஸ்வாட் பள்ளத்தாக்கின் பெரும் பகுதிகள் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதுபோலத்தான் உள்ளன. இப்பகுதியில் தொலைக்காட்சி, இசை நிகழ்ச்சிகள், கல்வி, ஏன் கடைக்குப்போவதில்கூட பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே தலிபான்களின் இக்கட்டுப்பாட்டை எதிர்த்து பெண்கல்விக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வந்தார் மலாலா. பிபிசி போன்ற பன்னாட்டு ஊடகங்களுக்கும் இவை தொடர்பான செய்திகளை வழங்கி வந்தார் மலாலா. குழந்தைகள் பாராளுமன்றத்தின் தலைவராக மலாலா பங்கேற்ற வீடியோ காட்சி வெளியானது. 2011ம் ஆண்டில் தென்னாப்ரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, உலக அமைதிக்கான குழந்தைகள் விருதுக்கு மலாலாவின் பெயரைப் பரிந்துரைத்தார். அதே ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. இப்படிப் பாராட்டு, பரிசுகளோடு கொலை மிரட்டல்களும் மலாலாவைப் பின் தொடர்ந்தன. 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தலிபான்களின் துப்பாக்கிக் குண்டுகள் மலாலாவின் தலையைத் துளைத்துச் சென்றன. “பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காகப் போராடிய 15 வயது மலாலா யூசுப்சாய்மீது தலிபான் தீவிரவாதிகள் கடும் கோபம்கொண்டு, அவரைத் தலையில் சுட்டனர். இதில் மலாலா படுகாயம் அடைந்தார்” என்ற செய்தி தீயென உலகெங்கும் பரவியது. மலாலா முதலில் பாகிஸ்தானிலும், பின்னர் இங்கிலாந்திலும் சிகிச்சை பெற்றார். அவருக்கு பலமுறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இப்போது நலமுடன் இருக்கும் மலாலா, கடந்த மார்ச் முதல் பிரிட்டனில் பள்ளிக்குச் சென்று வருகிறார்.
கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகளின் கல்விக்காகத் தொடர்ந்து போராட இருக்கின்றார் 16 வயது மலாலா. இந்த மலாலா தின நிகழ்வில் பேசிய பான் கி மூன், RealAudioMP3 பள்ளிக்குச் செல்வதற்காக எந்தக் குழந்தையும் இனிமேல் இறக்கக் கூடாது என்றும், உலகில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் 5 கோடியே 70 கோடிச் சிறார் கல்வி கற்பதற்கு நாம் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதே நிகழ்வில் உரையாற்றிய, உலகளாவியக் கல்விக்கான ஐ.நா பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Gordon Brown, கொலை முயற்சிக்கு மத்தியிலும் மலாலாவிடம் விளங்கும் நம்புதற்கரிய மனஉறுதியைப் பாராட்டினார். RealAudioMP3 அன்பர்களே, சாதி, மதம், நிறம், இனம், சமூகநிலை போன்றவற்றால் பாகுபாடுகளைச் சந்திக்கும் மக்களுக்காகப் போராடும் ஆர்வலர்களுக்கு மலாலாவின் துணிச்சல் மேலும் சக்தியைக் கொடுக்கின்றது என்று சொல்லலாம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் சம உரிமைகோரி இஞ்ஞாயிறன்றும் இத்திங்களன்றும் தேசிய அளவில் போராட்டங்கள் இடம்பெற்றன. அந்நாட்டில் வாழும் வெள்ளையர் அல்லாத பிற இனங்களைச் சார்ந்த இளையோர், நீதிஅமைப்பின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டும், இனப் பாகுபாட்டு அடக்குமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்நாட்டில் 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம்தேதி Trayvon Martin என்ற 17 வயது கறுப்பின இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 29 வயது George Zimmerman என்பவர் நிரபராதி என இச்சனிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டதே இப்போராட்டத்துக்குக் காரணம். மேலும், பிரான்சிலும், பிற ஐரோப்பியப் பகுதிகளிலும், பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் பெரும் மாற்றங்கள் இடம்பெறக் காரணமாக இருந்த ப்ரெஞ்ச் புரட்சி தொடங்கிய நினைவுநாள் இஞ்ஞாயிறன்று பாரிசில் வெகு ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்பட்டது. 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி தொடங்கிய ப்ரெஞ்ச் புரட்சியினால் அந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய புதிய கோட்பாடுகளுடன் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது.
அன்பு நேயர்களே, சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும் கோரும் குரல்கள் உலகில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு சிறுமி மலாலா ஓர் எடுத்துக்காட்டு. கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் கல்விக்கான மலாலாவின் குரலை மௌனமாக்கப் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்குத் திறனில்லை. பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஒலித்துக்கொண்டிருந்த ஒரு குரல், இன்று கோடியாய்ப் பலுகி உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சொன்னதுபோல, நம்பிக்கையின் கதவுகள் திறக்கப்படட்ட RealAudioMP3 ும். அனைவரும் நம்பிக்கை மற்றும் அமைதியின் காணக்கூடிய அடையாளங்களாக வாழட்டும். மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் சொன்னது போல, வெறுப்பு வாழ்வை முடக்குகின்றது, அன்பு, வாழ்வை விடுவிக்கின்றது. வெறுப்பு, வாழ்வை குழப்புகின்றது, அன்பு, வாழ்வை தெளிவுபடுத்துகின்றது. வெறுப்பு, வாழ்வை இருளாக்குகின்றது, அன்பு, வாழ்வை ஒளிர்விடச் செய்கின்றது என்பது உணரப்படட்டும். இனிமேல் பெண் கல்விக்குக் குரல் எழுப்ப வேண்டிய சூழல் இவ்வுலகில் இல்லாதிருக்கட்டும். இவ்வுலகம் மதத்தைக் கடந்து மனிதத்தை நோக்கி நடக்கட்டும்! பெண் கல்விக்கும், மனித உரிமைக்கும் ஆதரவான பல மலாலாக்களின் குரல்கள் கேட்கப்படட்டும். மலாலா பற்றவைத்துள்ள பெண்கல்விக்கான ஆர்வ நெருப்பு உறங்காதிருக்கட்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற சுடர் உலகில் அணையாதிருக்கட்டும்.







All the contents on this site are copyrighted ©.