2013-07-13 15:48:48

பொதுக்காலம் 15ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 1964ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி விடியற்காலையில் நியூயார்க் பெருநகரின் புறநகர் பகுதி ஒன்றில் நிகழ்ந்த ஒரு வேதனையான சம்பவம் இது. அதிகாலை 3.30 மணியளவில் 28 வயது நிறைந்த இளம்பெண் Kitty Genovese, தன் காரை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் அடுக்கு மாடி குடியிருப்பை நோக்கி நடந்தார். அப்போது திடீரென ஒருவர் அவரை இடைமறித்து, கத்தியால் குத்தினார். உடனே, Kitty, "என்னைக் கத்தியால் குத்திவிட்டான். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அலறினார். அவர் அலறலைக் கேட்டு, அந்த 10 மாடிக் கட்டிடத்தின் பல வீடுகளில் விளக்குகள் எரிந்தன. ஒருவர் சன்னல் வழியே, "அந்தப் பெண்ணை விட்டுவிடு" என்று கத்தியதும், கத்தியால் குத்தியவர் அவ்விடம் விட்டு அகன்றார். Kitty, இரத்தக் காயங்களுடன் தடுமாறியபடி தன் வீடு நோக்கி நடந்தார். எரிந்த விளக்குகள் அணைந்தன. மீண்டும் அந்த மனிதர் திரும்பி வந்து Kittyஐக் கத்தியால் குத்தினார். மீண்டும் Kitty குரல் எழுப்ப, மீண்டும் விளக்குகள் எரிந்தன. பல வீடுகளில் சன்னல்கள் திறந்தன. கத்தியால் குத்தியவர் தான் வந்திருந்த காரில் ஏறிச்சென்றார். விளக்குகள் அணைந்தன. அப்போது மணி 3.35. 15 நிமிடங்கள் சென்று, அதே ஆள் மீண்டும் அவ்விடம் வந்தார். இம்முறை, இளம்பெண் Kitty, அடுக்குமாடிக் கட்டிடத்தின் வாசலில் விழுந்து கிடப்பதைக் கண்டார். மீண்டும் அவரைக் கத்தியால் குத்தினார். இளம்பெண் அலறினார். இதற்குள், அந்த அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து ஒருவர் காவல்துறைக்கு 'போன்' செய்ததால், காவல் துறையினர் 3.50 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தனர். அதற்குள், கத்தியால் குத்தியவர் தப்பித்துவிட்டார். இளம்பெண் Kitty Genovese இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

Kitty Genovese என்ற இளம்பெண்ணின் கதை நியூயார்க் பெருநகர் மக்களின் மனசாட்சியில் இரணமாகப் பதிந்தது. இளம்பெண்ணை அந்த மனிதர் கத்தியால் குத்தியதை தங்கள் வீடுகளிலிருந்து 38 பேர் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று, இந்த நிகழ்வை துப்பறிந்தவர்கள் கண்டறிந்தனர். ஒருவேளை, அந்தப் பெண் முதல் முறை தாக்கப்பட்டபோதே, அந்த 38 பேரில் யாராவது ஒருவர் காவல்துறைக்குத் தெரியப்படுத்தியிருந்தால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இதையொத்த, அல்லது, இதையும்விடக் கொடுமையான நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நிகழும்போது, நாம் என்ன செய்கிறோம் என்ற ஒரு ஆன்ம ஆய்வை மேற்கொள்ள இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. 'நல்ல சமாரியர்' என்ற உலகப் புகழ்பெற்ற உவமையை மையமாக்கி நாம் மேற்கொள்ளும் இந்த ஆன்ம ஆய்வில் பல முக்கியமான கேள்விகளைச் சந்திக்கிறோம்.

பொதுவாக, நகர் வாழ் மக்களிடையே 'அடுத்தவர் மீது அக்கறையின்மை' என்ற நோய் அதிகம் பரவியுள்ளது என்பதற்கு, நியுயார்க்கில் Kitty Genovese கொலையுண்டதும், ஜெய்பூர் சாலையில் தாயும் குழந்தையும் இறந்ததும் எடுத்துக்காட்டுகள். நகர் வாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அக்கறையின்மை என்பது இன்று உலகளாவிய ஒரு நோயாகப் (Globalisation of indifference) பரவியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 8ம் தேதி, கடந்த திங்களன்று, இத்தாலியின் Lampedusa எனுமிடத்தில் ஆற்றிய திருப்பலியின் மறையுரையில் குறிப்பிட்டார்.
அந்த மறையுரையில், தொடக்க நூலில் நாம் காணும் இரு கேள்விகளைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கடவுள் ஆதாமை நோக்கி எழுப்பிய கேள்வியும், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கடவுள் காயினிடம் எழுப்பிய கேள்வியும் இன்றளவும் மனித சமுதாயத்தின் மனசாட்சியைத் துளைக்கும் கேள்விகள் என்று திருத்தந்தை கூறினார்.
ஆதாமும், காயினும் இக்கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியாமல் திகைத்தனர். கடவுள் கேட்டக் கேள்வியின் பதில் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்ளும் வழியை அவர்கள் சிந்தித்தனர். கேள்வி கேட்ட கடவுளை, திசை திருப்ப முயன்றனர். சாக்குப் போக்குகள் சொல்லி, தப்பிக்கப் பார்த்தார் ஆதாம். எதிர் கேள்வி கேட்டு மழுப்பினார் காயின்.

கேள்வி வடிவிலோ, பிற வடிவங்களிலோ கடவுளின் வார்த்தைகள் நம்மை வந்தடையும்போது, அந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மைகள் நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாக்குவதால், அவற்றைவிட்டு விலக நாம் முயற்சிகள் எடுக்கிறோம். கடவுளின் வார்த்தைகள் வெகுதூரத்தில் இருப்பதாக நாமே கற்பனை செய்து, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம். இதற்கு நேர்மாறாக, கடவுளின் கட்டளை என்ற உண்மை எப்போதும் உன் கண்முன்னே உள்ளது, அதைத் தேடி நீ வானத்திற்குச் செல்லவேண்டாம், கடல்களைக் கடக்க வேண்டாம் என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நமக்குச் சொல்லும் வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன.
இணைச் சட்டம் 30: 11-14
இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

உண்மையும், எதார்த்தமும் தெளிவாகத் தெரிந்தாலும், அவற்றைக் காண்பதற்குப் பதில், நம்மைக் காத்துக் கொள்வதற்குச் சாதகமான வழிகளில் சிந்திக்கவே நாம் முயல்கிறோம்.
இத்தகைய ஒரு சூழலை லூக்கா நற்செய்தி பத்தாம் பிரிவில் நாம் வாசிக்கிறோம். இறைவன் மீதும், அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வது ஒன்றே நிலைவாழ்வை அடையும் ஒரே வழி என்பதை, திருச்சட்ட அறிஞர் உணர்ந்திருந்தாலும், அந்த உண்மையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகளை அவர் தேடினார். இந்த உண்மையிலிருந்து அவர் ஏன் தப்பித்துக்கொள்ள முயன்றார்? என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம்... இயேசு இன்றைய நற்செய்தியில் இரு முறை விடுத்துள்ள ஆபத்தான சவால்கள். இறையன்பு, அயலவர் அன்பு என்ற இரு உன்னத கட்டளைகளை திருச்சட்ட அறிஞர் மனப்பாடமாகக் கூறியதும், இயேசு கூறிய வார்த்தைகள்: "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்." (10 : 28)

இந்த உன்னத கட்டளைகளை மனப்பாடம் செய்வது மட்டும் போதாது. அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று இயேசு விடுத்த ஆபத்தான சவாலைச் செயல்படுத்த அஞ்சிய திருச்சட்ட அறிஞர், மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். உலகப் புகழ்பெற்ற கேள்வி அது: "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (10 : 29)
பதிலைத் தெரிந்து வைத்துக்கொண்டே எழுப்பப்பட்ட குதர்க்கமான கேள்வி இது என்பதை எளிதில் உணரலாம். இயேசுவை மடக்கிவிடலாம் என்ற கனவுடன் கேட்கப்பட்ட கேள்வி இது. "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கடவுள் கேட்டபோது, பதிலுக்கு, "நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" (தொ.நூ. 4 : 9) என்று காயின் கேட்டாரே, அதுபோன்ற குதர்க்கமான கேள்விதான் இதுவும்.
இயேசு அந்த குதர்க்கமானக் கேள்விக்கு அளித்த பதில், 'நல்ல சமாரியர்' என்ற ஓர் அற்புத உவமையாக 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மனித சமுதாயத்தை வாழ வைத்துள்ளது. இந்த உவமை நமக்குத் தெரிந்த உவமை என்பதால், நம் கவனத்தை வேறு திசையில் திருப்புவோம். இயேசுவிடம் இந்த உவமையைத் தூண்டி எழுப்பிய திருச்சட்ட அறிஞரின் கேள்வியையும், இந்த உவமையின் இறுதியில் இயேசு எழுப்பிய கேள்வியையும் இணைத்து சிந்திப்பது பயனளிக்கும்.

"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (10 : 29) என்பது திருச்சட்ட அறிஞர் எழுப்பிய கேள்வி. "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" (10 : 36) என்பது உவமையின் இறுதியில் இயேசு தொடுத்தக் கேள்வி.
திருச்சட்ட அறிஞர் "எனக்கு" என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறார். இயேசுவோ "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு" என்பதை அழுத்திக் கூறுகிறார். இயேசுவின் கேள்வியை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், "உமக்கு அடுத்திருப்பவர் யார் என்பதை விட, நீர் யாருக்கு அடுத்திருப்பவராக இருக்கிறீர் என்பதே முக்கியம்" என்பதை இயேசு அழுத்தந்திருத்தமாய் கூறுகிறார். அதுமட்டுமல்ல, “நீர் யாருக்கு அடுத்தவர் என்பதை உணர்ந்துவிட்டீரா? மிக்க நன்று. நீரும் போய் அப்படியே செய்யும்" (10 : 37) என்பது இயேசு இறுதியாக நமக்குத் தரும் கட்டளை. அதாவது, இறையன்பு, பிறரன்பு ஆகிய நியமங்கள், வெறும் மனப்பாடக் கட்டளைகளாக, சிந்தனைகளாக இருப்பதில் பயனில்லை; அவை செயல்வடிவம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தவே, இயேசு இவ்வுவமையின் துவக்கத்திலும், இறுதியிலும் "நீர் அப்படியே செய்யும்" (10: 28,37) என்ற சொற்களை நம்முன் ஒரு சவாலாக வைக்கிறார்.

1964ம் ஆண்டு நியூயார்க் நகரில் Kitty Genovese என்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையுடன் நம் சிந்தனைகளைத் துவக்கினோம். 1965ம் ஆண்டு வியட்நாம் போரில் அடிபட்ட ஒருவர், ஒரு சிறுமியைக் காப்பாற்றிய அழகான நிகழ்வுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். 1965ம் ஆண்டு வியட்நாம் போரில் நிலத்தடி கண்ணிவெடி ஒன்றில் கால் வைத்ததால், தன் இரு கால்களையும் இழந்தவர் Bob Butler என்ற இளம் இராணுவ வீரர். கால்களை இழந்தாலும், துணிவுடன் வாழ்வை எதிர்கொண்டார் Bob. 20 ஆண்டுகள் சென்று, அவர் தன் வீரத்தை, பிறரன்பை நிலைநாட்ட மீண்டும் ஒரு வாய்ப்பு உருவானது.

ஒரு நாள் அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, அடுத்த வீட்டிலிருந்து ஒரு பெண் அலறுவதைக் கேட்டார். சக்கர நாற்காலியில் அங்கு வேகமாகச் சென்றார். அங்கு, வீட்டின் பின்புறத்தில் இருந்த நீச்சல் குளத்திற்கு அருகே நின்றபடி ஓர் இளம் தாய், குளத்தில் விழுந்துவிட்ட தன் மகளைக் காப்பாற்ற முடியாமல் கத்திக் கொண்டிருந்தார். Bob Butler உடனே தண்ணீரில் குதித்து, குளத்தின் கீழ் மட்டத்தில் கிடந்த Stephanie என்ற அச்சிறுமியை மேலே கொண்டுவந்து, அவருக்குத் தேவையான முதல் உதவிகளைச் செய்தார். "கவலைப் படாதீர்கள், உங்கள் மகள் பிழைத்துக் கொள்வார்" என்று அந்தத் தாய்க்கு நம்பிக்கை அளித்தார். பேச்சு மூச்சற்று, முகமெல்லாம் நீலம் பாய்ந்திருந்த அந்தச் சிறுமியின் உடலிலிருந்து நீரை அகற்ற அவர் செய்த முயற்சி வெற்றி கண்டது. Stephanie தன் வாய் வழியாக நீரை வெளியேற்றினார். மீண்டும் மூச்சுவிடத் துவங்கினார்.
தன் மகள் இறந்துவிட்டதாக எண்ணி, தான் கதறிக்கொண்டிருந்தபோது, அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை Bobக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று, அந்தத் தாய் கேட்டபோது, Bob தனக்கு வியட்நாமில் நிகழ்ந்த விபத்தைக் குறித்துச் சொன்னார். "நான் குண்டடிபட்டு அங்கு கிடந்தபோது, அவ்வழியே வந்த ஒரு வியட்நாம் சிறுமி, என்னை அவர் கிராமத்துக்கு இழுத்துச் சென்றார். போகும் வழியெல்லாம் அவர் என்னிடம், 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப் படாதீர்கள்' என்று மட்டுமே சொல்லியபடி என்னை இழுத்துச் சென்றார். அன்று, அச்சிறுமி தந்த நம்பிக்கைதான் என்னை வாழ வைத்தது" என்று கூறினார்.
'உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை' என்ற சூழலில் வாழும் நமக்கு, 'அடுத்தவர் மீது அக்கறை கொள்வோர் பேறுபெற்றோர்' என்ற தலைப்பில் Tommy Lane என்ற அருள் பணியாளர் வழங்கியுள்ள வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன. இந்த நம்பிக்கை வார்த்தைகளுடன் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:










All the contents on this site are copyrighted ©.