2013-07-13 16:15:20

பாகிஸ்தான் ஆயர் : பாடப்புத்தகங்களில் ஒருதலைச்சார்பான கருத்துக்களுக்கு எதிர்ப்பு


ஜூலை,13,2013. பாகிஸ்தான் நாட்டில் பாடப்புத்தகங்களில் ஒருதலைச்சார்பான மற்றும் அருவருப்பான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுள்ளார் அந்நாட்டின் கராச்சி பேராயர் Joseph Coutts.
“அமைதிக்கான கல்வி” என்ற தலைப்பில் கராச்சியில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Joseph Coutts, பாடப்புத்தகங்களில் மதத்தீவிரவாதக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதற்கு எதிராக அந்நாட்டின் பல்சமய, பல்லின, பலமொழி மற்றும் பல கலாச்சாரங்களைச் சார்ந்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கல்வித்துறையினரால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களில் மதத்தீவிரவாதத்தைத் தூண்டும் கருத்துக்கள் 2009ம் ஆண்டில் 45 இடம்பெற்றிருந்தன, ஆனால் 2012ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது என்றும் பேராயர் Joseph Coutts கூறினார்.
மேலும், கராச்சி பேராயரின் இவ்வழைப்புக்கு ஆதரவு தெரிவித்த சிந்து மாநிலத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயலர் தாஜ் ஹைய்டர், இத்தகைய கருத்துக்களைப் பரப்புவதன்மூலம் பிறரை அழிப்பதற்கு மட்டும் நாம் திட்டமிடவில்லை, மாறாக, நம் நாட்டையே கொலை செய்கிறோம் என்று கூறினார்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.