2013-07-12 15:27:37

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான சீன எழுத்துக்கள் கண்டுபிடிப்பு


ஜூலை,12,2013. உலகின் மிகப் பழமையான எழுத்து வடிவங்கள் என்று கருதப்படக்கூடிய ஒரு தொகுதி எழுத்து வடிவங்களை இரு கற்கோடாரிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சீனாவில் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப் பகுதியில், உடைந்த கோடாரி போன்ற பொருள்களில் காணப்பட்ட இந்த எழுத்து வடிவங்கள் குறைந்தது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்தக் கோடாரிகளில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் ஆரம்பகாலச் சீன மொழியாக இருக்கும் என்று ஒரு ஆய்வாளர் கூறியுள்ளவேளை, இவை ஆதிமனிதர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்திய சித்திரத் தொகுப்புக்கள் என்று வேறு சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த எழுத்து வடிவங்களின் பொருளை இதுவரை படித்தறிய முடியவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மெசபத்தோமிய நாகரிகக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்களும் ஏறக்குறைய இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்தவைதான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஷங்காய்க்குத் தெற்கே 2003ம் ஆண்டுக்கும் 2006ம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 200க்கும் மேற்பட்ட பல மதிப்புமிக்க பொருட்களில் இந்தக் எழுத்து வடிவங்களைக் கொண்ட கோடரிகளும் உள்ளடங்கும்.
இதுவரை சீனாவில் கிடைத்த மிகப் பழமையான எழுத்துக்கள் விலங்குகளின் எலும்புகளில் காணப்பட்டுள்ளன. அவை Shang அரச குலம் ஆட்சி செய்த 3,600 ஆண்டுகளுக்கு முந்தியவை.

ஆதாரம் : AP/BBC







All the contents on this site are copyrighted ©.