2013-07-11 16:01:39

மால்ட்டாவிலிருந்து புலம் பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவதற்குத் தடை


ஜூலை,11,2013. சோமாலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்தோரை மீண்டும் லிபியாவுக்கு அனுப்பி வைக்க முயன்ற மால்ட்டா அரசை இந்த முயற்சியிலிருந்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.
சோமாலியா, எரித்ரியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த வாரத்தில் மட்டும் மால்ட்டா கரைகளை அடைந்துள்ள 400க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அந்நாட்டு அரசு மீண்டும் அனுப்பாமல் இருக்க ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை மதிப்பதாகவும் மால்ட்டா அரசு அறிவித்துள்ளது.
'உலகமயமாக்கப்பட்டுள்ள பாராமுகம்' என்ற போக்கினால், புலம்பெயர்ந்தோரின் துயரங்கள் நம்மைப் பாதிப்பதில்லை என்ற கருத்தை வலியுறுத்தி, ஜூலை 8, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa எனுமிடத்தில் வழங்கிய மறையுரையின் ஓர் எதிரொலியே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றத்தின் இந்த முடிவு என்று, இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர் Joseph Cassar வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தென் கோடியில் அமைந்துள்ள மால்ட்டா நாடு, புலம்பெயர்ந்தோரின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை என்றும் அருள் பணியாளர் Cassar விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.