2013-07-11 16:02:26

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புலம் பெயர்ந்தோர் சார்பான கருத்துக்கு ஆஸ்திரேலிய இளையோர் ஆதரவு


ஜூலை,11,2013. இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புலம் பெயர்ந்தோரின் சார்பாக Lampedusaவில் விடுத்த அழைப்பிற்கு ஆஸ்திரேலிய இளையோர் தகுந்த முறையில் பதில் அளித்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
AYCS எனப்படும் 'ஆஸ்திரேலிய இளைய கிறிஸ்துவ மாணவர்கள்' அமைப்பு ஒன்று, திருத்தந்தை வழங்கிய மறையுரையால் உந்தப்பட்டு, ஆஸ்திரேலிய புலம் பெயர்ந்தோர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சார்பில், அந்நாட்டின் குடிபெயர்வுத் துறைக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பல நாடுகளிலும் வன்முறைகளுக்கு உள்ளாகும் மக்கள் ஆஸ்திரேலியாவில் நல்வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் படகுகளில் அங்கு வருவதாகச் சுட்டிக்காட்டும் இவ்விளையோர் அமைப்பு, தகுந்த ஆவணங்கள் இன்றி ஆஸ்திரேலியாவை அடையும் குழந்தைகளையும் சிறார்களையும் முகாம்களில் இருந்து நீக்கி, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வது அரசின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய பள்ளிகளில் பயிலும் 8000க்கும் அதிகமான இளையோர் புலம் பெயர்ந்தோர் வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அண்மையில் சென்று, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்தனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.