2013-07-11 15:59:55

கர்தினால் Veglio : தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட அழைப்பு


ஜூலை,11,2013. மனித உயிரைக் காக்கும் ஒரு முக்கிய கொடை தண்ணீர் என்பதை சுற்றுலா உலகமும் உணர்ந்து செயல்படவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ‘உலகச் சுற்றுலா நாளு’க்கென குறிக்கப்பட்டுள்ள "சுற்றுலாவும் தண்ணீரும்: நமது பொதுவான எதிர்காலத்தைக் காப்பாற்ற" என்ற தலைப்பை மையமாக்கி, பயணிகள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் இந்த இயற்கைக் கொடையை சரிவர பயன்படுத்தாமல் வீணாக்கும் செயல்பாடுகளையும் கண்டு வருகிறோம் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Veglio.
'நாம் அனைவரும் இயற்கையைப் பேணும் காவலர்கள்' என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நமக்கு நினைவுறுத்தியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டும் கர்தினால் Veglioவின் செய்தி, இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதும், பயன்படுத்துவதும் அனைத்து மனிதர்களின் அடிப்படை உரிமை மற்றும் கடமை என்பதையும் எடுத்துரைக்கிறது.
பொதுவாக நீர்நிலைகள், கடற்கரைகள் என்று நீருள்ள பகுதிகளையே சுற்றுலாப் பயணிகள் நாடிச்செல்லும் வேளையில், அப்பகுதிகளில் உள்ள நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வழிகளை சுற்றுலாத் துறையினரும், பன்னாட்டு அரசுகளும் உறுதி செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை கர்தினால் Veglio தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.