2013-07-10 15:48:15

பெங்களூரு ISI நிறுவனப் பொன்விழா


ஜூலை,10,2013. ஜூலை 12, வருகிற வெள்ளிக்கிழமை முதல் பெங்களூருவில் அமைந்துள்ள ISI எனப்படும் இந்திய சமுதாய நிறுவனம் தன் பொன்விழா ஆண்டைத் துவக்குகிறது.
பொன் விழா ஆண்டு நிகழ்வுகளின் துவக்கமாக, வருகிற வெள்ளியன்று, மனித உரிமை ஆர்வலர் Teesta Setalwad அவர்கள் 'ஒரு குடியரசின் போராட்டம்: சட்ட உரிமைகளும், பெரும்பான்மையினரின் கருத்துக்களும்' என்ற தலைப்பில் வழங்கும் உரையுடன் ISIயின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
சமுதாய மாற்றங்களை உருவாக்கும் பயிற்சிகளுக்காக, 1963ம் ஆண்டு இயேசு சபை அருள் பணியாளர் Henry Volken அவர்களின் முயற்சியால், ISI நிறுவனம் உருவாக்கப்பட்டதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மனித உரிமைகள், பாலியல் ரீதியான சமத்துவம், மதசார்பற்ற சமுதாயம், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஆகிய பல்வேறு தளங்களில் பயிற்சிகள் அளிக்கும் நிறுவனமாக ISI செயல்பட்டு வருகிறது என்றும், தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இந்நிறுவனத்தின் இலக்கு மக்கள் என்றும் UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ISI எனப்படும் இந்திய சமுதாய நிறுவனம், 1951ம் ஆண்டு இயேசு சபை அருள் பணியாளர் Jerome D'Souza அவர்களால் புது டில்லியில் துவக்கப்பட்டது என்பதும், அதன் ஒரு கிளை நிறுவனமாக, பெங்களூரு ISI துவக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.