2013-07-10 15:44:19

கர்தினால் Pengo : ஆப்ரிக்காவில் நற்செய்திப்பணிக்கு, அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்


ஜூலை,10,2013. ஆப்ரிக்கக் கண்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நற்செய்திப் பணி, அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று Dar es salaam உயர்மறைமாவட்டத்தின் கர்தினால் Polycarp Pengo அவர்கள் கூறினார்.
ஜூலை 8, இத்திங்கள் முதல் ஜூலை 14, வருகிற ஞாயிறு முடிய காங்கோ குடியரசில் நடைபெற்றுவரும் ஆப்ரிக்க ஆயர்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியாற்றிய கர்தினால் Pengo அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்கும், நீதிக்கும் வழங்கவேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினார்.
ஆயர்களின் மாநாட்டில் உரையாற்றிய Senegal நாட்டைச் சேர்ந்த கர்தினால் Theodore Adrian Sarr அவர்கள், அமைதி, நீதி ஆகிய முக்கியப் பணிகளைச் செய்யக்கூடிய பணியாளர்களை, ஆப்ரிக்கத் திருஅவை பெறவேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
5 கர்தினால்கள், 100க்கும் அதிகமான ஆயர்கள், இன்னும் பல நூறு குருக்கள் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொண்ட இத்திருப்பலியில், அரசுத்துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.