2013-07-09 15:43:48

ரம்ஜான் மாதத்தில் சிரியாவில் அமைதி காக்கப்படுமாறு அழைப்பு


ஜூலை,09,2013. ரம்ஜான் புனித மாதம் தவத்தின் காலம், கடவுளிடம் மனந்திரும்பிச் செல்லும் காலம், நம் சகோதர சகோதரிகளிடம் மன்னிப்புக் கேட்கும் காலம் என்பதால் இந்த ரம்ஜான் மாதத்தில் சிரியாவில் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார் இயேசு சபை அருள்பணி Paolo dall'Oglio.
இத்திங்கள் மாலை தொடங்கியுள்ள ரம்ஜான் நோன்பு மாதத்தையொட்டி இவ்வாறு கேட்டுள்ள இயேசு சபை அருள்பணி dall'Oglio, சட்டம் மற்றும் நீதியை மதிக்கும் அதேவேளை, ஒவ்வொருவரும் மனம் வருந்துவதின் அருளைப் பெறுமாறு இறைவனை இறைஞ்சுவோம் எனவும் கூறியுள்ளார்.
சிரியாவிலும், பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் சண்டை முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள இயேசு சபை அருள்பணி dall'Oglio, பாகிஸ்தானிலிருந்து லெபனன்வரை, எகிப்திலிருந்து மொரோக்கோவரை, மோதல்கள் இடம்பெற்று வருகின்றன, இவை எண்ணற்ற இழப்புக்களை மட்டுமல்லாமல், இசுலாமின் முகத்தை உருவிழக்கச் செய்கின்றன என்றும் கூறினார்.
கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள் இரத்தம் சிந்தும் சண்டையை புறக்கணிக்கின்றனர், ஆனால், சுன்னி மற்றும் ஷியைட் முஸ்லீம் பிரிவினருக்கிடையே தொடர்ந்து சண்டை இடம்பெற்றுவருகிறது, இச்சூழலில் சிரியா, மோதலின் முக்கிய போர்த்தளங்களில் ஒன்றாக இருக்கின்றது என்றும் அக்குரு Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.