2013-07-09 15:45:33

எல் சால்வதோரின் அமைதிக்கான நடவடிக்கையில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்


ஜூலை,09,2013. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கொலைகளுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் சான் சால்வதோர் துணை ஆயர் கிரகோரியோ ரோசா சாவேஸ்.
குடிமக்கள் போர் நிறுத்த உடன்பாட்டில் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நம்பகத்தன்மையும் உறுதியான நிலையும் மிகவும் முக்கியமானவை என்றுரைத்த ஆயர் ரோசா சாவேஸ், அமைதிக்கான நடவடிக்கையில் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாட்டில் அமைதியைக் கொண்டுவருவதற்குப் பல்வேறு வழிகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டன, ஆயினும், குழப்பமும் நிச்சயமற்ற நிலையிலுமே நாடு இருக்கின்றது என்று Fides செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய தகவலில் கூறியுள்ளார் ஆயர் ரோசா சாவேஸ்.
எல் சால்வதோரில் போரிடும் Mara Salvatrucha, Barrio ஆகிய இரு முக்கிய புரட்சிக் குழுக்கள் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அதற்குப் பின்னர் அந்நாட்டில் தினமும் இடம்பெறும் கொலைகள் 14லிருந்து 5 ஆகக் குறைந்துள்ளன என, காவல்துறையின் அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.