2013-07-08 16:03:28

திருத்தந்தையின் லாம்பெதூசா திருப்பயணம்


ஜூலை,08,2013. RealAudioMP3 ஐரோப்பாவின் தென்முனையிலுள்ள, இத்தாலியின் லாம்பெதூசா தீவில் அடைக்கலம் தேடியுள்ள ஆப்ரிக்கக் குடியேற்றதாரரையும், இவர்களுக்கு உதவி செய்யும் அத்தீவின் மக்களையும் பார்வையிட்டு, இக்குடியேற்றதாரருக்கு மனிதாபிமான உதவிகளுக்கு அழைப்புவிடுப்பதற்காக இத்திங்களன்று அரைநாள் திருப்பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள் காலை 7.20 மணிக்கு வத்திக்கானில் அவர் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு உரோம் சம்ப்பினோ இராணுவ விமான நிலையத்தை காலை 8 மணியளவில் அடைந்தார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு லாம்பெதூசா தீவு சென்றடைந்தார். லாம்பெதூசா தீவின் மேயர் ஜூசப்பினா நிக்கோலினியும், Agrigento பேராயர் Francesco Montenegroம் விமானம்வரை சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றனர். பின்னர் காலா பிசானா எனுமிடத்துக்கு அங்கிருந்து காரில் சென்று, இத்தாலிய கடல்பாதுகாப்புப் படகில் ஏறினார். அரசின் கடல்பாதுகாப்புத்துறையினரும், மீனவர்களும் தங்கள் தங்கள் படகுகளில் பாப்பிறை சென்ற படகைப் புடைசூழ்ந்து சென்றனர். ஐரோப்பாவின் தென்முனையான லாம்பெதூசா தீவுக்கு வந்த படகுப் பயணத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான குடியேற்றதாரர்கள் நினைவாக மலர்வளையம் ஒன்றைக் கடலில் போட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏறக்குறைய இருபதாயிரம் குடியேற்றதாரர்கள் உயிரிழந்ததாக ஒரு பள்ளி விபரம் கூறுகிறது. திருத்தந்தை சென்ற விமானம் லாம்பெதூசா தீவை அடைந்த அதேநேரத்தில் மாலி நாட்டிலிருந்து 165 குடியேற்றதாரர்களை ஏற்றிவந்த படகு ஒன்று அத்தீவின் கரையை அடைந்தது. லாம்பெதூசா கடற்கரைக்கு ஏறக்குறைய 11 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தப் படகின் எஞ்சின் பழுதானதால் அதில் தவித்துக் கொண்டிருந்த நான்கு கர்ப்பிணி பெண்கள் உட்பட 120 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
பின்னர் கரைக்கு வந்த பின்னர் குடியேற்றதாரர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. இவர்களில் முஸ்லீம்களும் இருந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ், இக்குடியேற்றதாரர்களிடம், உங்களின் இந்த இனிய வரவேற்புக்கு நன்றி. இன்று நாம் ஒருவர் ஒருவருக்காகவும், இன்று இங்கு வர இயலாதவர்களுக்காகவும் செபிப்போம் என்று கூறினார்.
இங்குள்ள குடியேற்றதாரர்கள் பலரும் அரபு மொழியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக நாங்கள் எங்கள் நாடுகளைவிட்டு வந்துள்ளோம். இந்த நிம்மதியான இடத்தை அடைவதற்கு முன்னர், பல்வேறு வியாபாரிகளால் நாங்கள் கடத்தப்பட்டோம், பல்வேறு தடைகளை எதிர்கொண்டோம், நீண்டகாலத் துன்பத்துக்குப் பின்னர் இங்கு வந்துள்ளோம், இத்தாலியில் நிறைய அகதிகள் உள்ளனர், எனவே பிற ஐரோப்பிய நாடுகளும் எங்களுக்கு உதவுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோள்விடுக்க வேண்டும், திருத்தந்தைதான் தங்களைக் காப்பாற்ற வேண்டும்
இவ்வாறு லாம்பெதூசா தீவிலுள்ள குடியேற்றதாரர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். பின்னர் காலை 10.30 மணிக்கு லாம்பெதூசா தீவின் விளையாட்டு வளாகத்தில் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அண்மைக் காலங்களில் கடலில் இறந்த குடியேற்றதாரர்களின் நினைவாக இத்திருப்பலியை அவர் நிகழ்த்தியதால் வைலட் நிறத்தில் திருப்பலி ஆடையை உடுத்தியிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி மேடை பல வண்ணத்தில் மீன்பிடி படகுபோன்று அமைக்கப்பட்டு மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்துப் பாராட்டினார் திருத்தந்தை. இத்திருப்பலியில் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய Agrigento பேராயர் Francesco Montenegro, திருத்தந்தையின் வரவால், ஆண்டவர் திருத்தந்தையின் உருவில் தம் மக்களைச் சந்திக்க வந்துள்ளார் என்று உணருவதாகத் தெரிவித்தார். அண்மை ஆண்டுகளாக இத்தீவு, படகு கவிழ்தல், சட்டத்துக்குப் புறம்பே குடியேறும் மக்கள், குடியேற்றதாரர்கள், அவசரகாலம், இறப்பு, நம்பிக்கை என பலவற்றை அனுபவித்து வருகிறது. இத்தீவு எப்பொழுதும் எரியும் விளக்கைக் கொண்டுள்ளது. ஏனெனில் இங்கு அவசரகால உதவிகளை நிறுத்தாமல் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆயினும், குடியேற்றதாரர்க்கு அவசரகால உதவிகளை மட்டும் செய்தால் போதாது, அவர்கள் நீதியுடனும், மனித மாண்புடனும் நடத்தப்பட அரசியல்ரீதியாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று சொல்லி, திருத்தந்தைக்காகவும் அவரது திருப்பணிக்காகவும் செபிப்பதாக உறுதி கூறினார் பேராயர் Montenegro.
இத்திருப்பலியில் கலந்து கொண்ட ஏறக்குறைய பத்தாயிரம் விசுவாசிகளுக்கு மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நல்லதோர் வாழ்வைத் தேடிவரும் குடியேற்றதாரர்களில் பலரின் உயிரிழப்புகள் போன்ற பெருவிபத்துகளுக்கு இட்டுச் செல்லும் உலகளாவிய பொருளாதாரக் கொள்கையின் பாராமுகத்துக்கு எதிராகப் பேசினார்.
படகிலிருந்து கடலில் இறந்த குடியேற்றதாரர்கள் நம்பிக்கையின் பாதையாக இல்லாமல், இறப்பின் பாதையாக இருந்துவிட்டனர். நாளிதழ்களில் இப்படித்தான் தலைப்பு செய்தியாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் இத்தகைய செய்தி ஒன்றைக் கேட்ட போது இதயத்தில் துனபத்தைக் கொண்டுவரும் முள்ளாக இருந்தது. அதன்பிறகுதான் இவ்விடம் வந்து செபித்து எனது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதற்கு எண்ணினேன். இங்கு பணிசெய்யும் தன்னார்வப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, ரம்ஜான் நோன்பைத் தொடங்கும் அன்பு முஸ்லீம் குடியேற்றதாரர்க்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார். உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் மாண்பு நிறைந்த வாழ்வைத் தேடும் உங்களுடன் திருஅவை எப்பொழுதும் இருக்கின்றது என்று உள்ளூர் மொழியில் “O’ scia’!” என வாழ்த்தும் சொன்னார்.
ஆதாம் பாவம் செய்த பின்னர் கடவுள் அவரிடம் நீ எங்கே இருக்கின்றாய் என்றுதான் முதலில் கேட்டார். தனது சகோதரரைக் கொன்ற காயினிடம், உனது சகோதரர் எங்கே என்று கேட்டார். இவ்விரு கேள்விகளும் இன்று அதிக சக்தியுடன் எதிரொலிக்கின்றன. நம்மில் பலர், நாம் வாழும் இன்றைய உலகு குறித்து அக்கறை கொள்வதில்லை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உனது சகோதரர் எங்கே என்ற கேள்வி இன்று எனக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் முன்வைக்கப்படுகின்றது. இக்குடியேற்றதாரர்கள் எத்தனை தடவைகள் புரிந்துகொள்ளப்படாமல், வரவேற்கப்படாமல், ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படாமல் இருந்திருக்கின்றனர். இவ்விடத்துக்கு வருவதற்கு முன்னர் பலர் மனிதக் கடத்தல் வியாபாரிகளின் கரங்களில் துன்புற்றுள்ளார்கள். இவர்களை இத்தாலிக்கு அனுப்புவதில் அதிக எண்ணிக்கையில் படகுகளில் ஏற்றி இவ்வியாபாரிகள் பணம் சேர்க்கிறார்கள். நாம் சகோதரத்துவ ஒருமைப்பாட்டை இழந்துள்ளோம். சாலைகளில் பாதி இறந்துகிடக்கும் சகோதரரைப் பார்த்து இது எனது வேலை இல்லை என்று ஒதுங்கி விடுகிறோம். கடலில் உயிரிழந்த குடியேற்றதாரர்க்காக எப்படி அழுவது என்பதை நாம் அனைவரும் மறந்து விட்டோம். நல்வாழ்வு கலாச்சாரம் நம்மைச் சிந்திக்க அழைக்கின்றது. தாராளமயமாக்கப்பட்ட இவ்வுலகில், பாராமுகத்தின் தாராளமயமாக்கல்களுக்குள் வீழ்ந்து விட்டோம். பிறரின் துன்பங்களைப் பார்த்து பழகிவிட்டோம். அது நம்மைப் பாதிப்பதில்லை. எனவே குடியேற்றதாரரின் நெருக்கடி நிலைகள் களையப்பட்டு, மாண்பு நிறைந்த வாழ்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பல சகோதர சகோதரிகள்மீது நாம் பாராமுகமாய் இருப்பதற்கு ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இத்திருப்பலிக்குப் பின்னர் அத்தீவின் புனித Gerlando பங்குக்குச் சென்று சிறிது நேரம் செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் லாம்பெதூசா விமானநிலையம் சென்று உரோமைக்குப் புறப்பட்டார். உரோம் சம்ப்பினோ இராணுவ விமான நிலையத்தை பகல் 1.45 மணியளவில் அடைந்தார். பின்னர் உடனடியாக வத்திக்கான் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட இத்திருப்பயணம் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ள யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனத்தின் இத்தாலியப் பிரிவு இயக்குனர் Giacomo Guerrera, படகுப் பயணத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான குடியேற்றதாரர்கள் நினைவாக மலர்வளையம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் கடலில் வைத்தது ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார். கடலில் இறந்த இக்குடியேற்றதாரர்கள், போர்கள், கலவரங்கள், ஏழ்மை ஆகியவற்றால் நசுக்கப்பட்டு பாதுகாப்பையும், நல்லதோர் எதிர்காலத்தையும் தேடியவர்கள். இவர்களில் பல அப்பாவிச் சிறாரும் உள்ளடங்குவர். இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்த செயல், மிகப் பெரிய மனிதாபிமானத்தையும் கனிவையும் எடுத்துரைக்கின்றது என்றும் Giacomo Guerrera கூறினார்.
மேலும், குடியேற்றதாரரை அரவணைக்கும் ஓர் இதயத்தைக் கொடுக்குமாறு நாம் இறைவனிடம் செபிப்போம். அதிகம் உதவி தேவைப்படும் மக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை இறைவன் தீர்ப்பிடுவார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சின்னஞ்சிறிய சகோதரரில் ஒருவருக்கு நாம் உதவி செய்யும்போதெல்லாம் இறைவனுக்கே செய்கிறோம் என்ற இயேசுவின் அருள்வார்த்தைகளை நினைவுகூர்வோம். துன்புறும் மக்களில் இறைவன் இருக்கிறார் என்று உணர்ந்து தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வருவோம்.







All the contents on this site are copyrighted ©.