2013-07-06 16:23:42

திருத்தந்தை பிரான்சிஸ் : கர்தினால் Van Thuân, நம்பிக்கைக்குச் சான்று


ஜூலை,06,2013. இறையடியார் கர்தினால் Francis Xavier Nguyên Van Thuân, நம்பிக்கைக்குச் சான்று மற்றும் அவரின் பணிவும் குருத்துவ ஆர்வமும் எண்ணற்ற மக்களின் வாழ்வைத் தொட்டுள்ளன என்று பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் Van Thuân அவர்களின் எழுத்துக்களும், அவர் தம் குருத்துவ வாழ்வு மூலம் வெளிப்படுத்திய எளிமை மற்றும் ஆழமான ஆன்மீக வாழ்வும், கருணையும் அன்பும் நிறைந்த திருப்பணிக்குத் தன்னை அழைத்த இறைவனோடு ஆழமாக ஒன்றித்திருந்தார் என்பதைக் காட்டுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
கர்தினால் Van Thuân அவர்களை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவது குறித்து மறைமாவட்ட அளவில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளதையொட்டி, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்த ஏறக்குறைய 400 வியட்னாம் விசுவாசிகள் மற்றும் திருஅவை அதிகாரிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1928ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மத்திய வியட்னாமில் பிறந்த கர்தினால் Van Thuân, 1953ம் ஆண்டில் குருவானார். இவர் 1967ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் Nha Trang மறைமாவட்டத்தின் முதல் வியட்னாம் ஆயராக நியமிக்கப்பட்டார். 1975ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி சாய்கான் உயர்மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அந்நாட்டின் கம்யூனிச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 13 ஆண்டுகாலச் சிறைத் தண்டனையில் 9 ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்டார். 1988ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி விடுதலை செய்யப்பட்ட இவர் 1991ம் ஆண்டில் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் உதவித் தலைவர், பின்னர் அவ்வவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2000மாம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், உடல்நலம் குன்றி 2002ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மரணமடைந்தார். கர்தினால் Van Thuânன் மூதாதையர் 1698ம் ஆண்டில் கிறிஸ்துவ விசுவாசத்துக்காகத் தங்கள் உயிரைக் கையளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.