2013-07-06 16:21:23

திருத்தந்தை பிரான்சிஸ், Trinidad மற்றும் Tobago அரசுத்தலைவர் சந்திப்பு


ஜூலை,06,2013. டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் அரசுத்தலைவர் Anthony Thomas Aquinas Carmona அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுத்தலைவர் Carmona.
டிரினிடாட் மற்றும் டொபாகோவின் குடிமக்களுக்கு, சிறப்பாக, அந்நாட்டில் கல்விக்கும், நலவாழ்வுக்கும், நலிந்தவர்கள் மற்றும் தேவையில் இருக்கும் மக்களுக்கும் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் இச்சந்திப்புகளில் குறிப்பிட்டுப் பேசப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
இளையோருக்கும் குடும்பங்களுக்கும் உதவுவதிலும், குற்றங்கள் மற்றும் வன்முறையை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளுக்கும் எதிரானப் போராட்டத்திலும் கத்தோலிக்கத் திருஅவை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இச்சந்திப்புகளில் கூறப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது. இச்சந்திப்பில் டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுத்தலைவர் வழங்கிய டிரம்மை அடித்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Republic of Trinidad and Tobago), அமெரிக்கக் கண்டத்தில், கரீபியன் பகுதியிலுள்ள தீவு நாடாகும். டிரினிடாட், டொபாகோ ஆகிய இரு தீவுகளில் 'டிரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான மக்கள் (96%) வாழ்கின்ற தீவுமாகும். இக்குடியரசில் இவ்விரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் உள்ளன. இத்தீவுகளில் ஐரோப்பிய காலனித்துவம் அமைந்த பின்னர், இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்ரிக்க, சீன, போர்த்துகீசிய மற்றும் இந்தியத் தலைமுறையினரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.