2013-07-05 16:39:46

கர்தினால் Ouellet : “விசுவாச ஒளி” திருமடல் இரு திருத்தந்தையரையும் இணைக்


ஜூலை,05,2013. ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller, புதுவழியில் நற்செய்தி அறிவிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella ஆகியோர் “விசுவாச ஒளி” திருமடலை, இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசினர்.
இத்திருமடல் குறித்துப் பேசிய கர்தினால் Ouellet, இத்திருமடல் இரு திருத்தந்தையராலும் எழுதப்பட்டுள்ளது நல்ல பொருத்தமாக இருக்கின்றது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் போதனைகளின் தொடர்ச்சியாக இருப்பதை, இத்திருமடலை வாசிக்கும் எவரும் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள் என்றும் கர்தினால் Ouellet தெரிவித்தார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “விசுவாச ஒளி” என்ற இந்த முதல் திருமடல், வெற்றிகரமான மற்றும் பலனுள்ள வாழ்வின் வழிகாட்டும் ஒளியாக, கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டாடுவதாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டது.
இறைபக்தியோடு சமூகச் செயல்கள் செய்யத் தூண்டுவதாகவும், மெய்யியல், இயற்கை அறிவியல் உட்பட மனித வாழ்வின் இருப்பின் ஒவ்வொரு கூறையும் ஒளிர்விப்பதாகவும் இத்திருமடல் அமைந்துள்ளது என்றும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனித சமுதாயத்தின் நெருக்கடி, கடவுளைப் புறக்கணிப்பதிலிருந்து தொடங்குகிறது என்பதை விரிவாக அலசியுள்ள இத்திருமடல், உயர்ந்த நோக்கங்கள் இன்றி தன்னலத்தால் உருவாக்கப்படும் நீதி, அதன் முக்கிய கூறுகளைப் புறக்கணிக்கின்றன, அவர்களின் வாழ்வும் பயனற்றதாக மாறுகின்றது எனவும் இத்திருமடல் கூறுவதாகச் சொல்லப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.