2013-07-04 16:17:34

பேராயர் தொமாசி : தொழிற்நுட்பங்கள் அறநெறி விதிகளுக்கு கட்டுப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்


ஜூலை,04,2013. மனித வளர்ச்சிக்கு அறிவியலும் தொழிற்நுட்மும் ஆற்றிவரும் நற்சேவைகள் குறித்து பாராட்டிய அதேவேளை, தொழிற்நுட்பங்கள் அறநெறி விதிகளுக்கு கட்டுப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவையின் உயர்மட்டக் கூட்டத்தில் இவ்வியாழக்கிழமையன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
அறிவியலையும் தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்தும்போது அவை ஏழ்மையில் அதிகம் வாடும் நாடுகளுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய பேராயர் தொமாசி, இதன்மூலம், வளரும் நாடுகளில் அறிவியல் அறிவை ஊக்குவிப்பதும், அந்நாடுகளுக்குத் தொழிற்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்வதும் பொதுநலனின் அறநெறிக் கூறுகளாக மாறும் எனக் கூறினார்.

உலகில் வறுமையை அகற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமான பாதையாக, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமுதாயம் ஆகிய மூன்று தூண்களில் நிலையான வளர்ச்சியை மீண்டும் கொண்டுசெல்லும் ஓர் இக்கட்டான சூழலில் அனைத்துலகச் சமுதாயம் நுழைந்து கொண்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் தொமாசி, கல்வியிலும் புதுப்பித்தலிலும் மூலதனங்களைப் போடுமாறு பரிந்துரைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.