2013-07-04 16:13:01

திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலிய பிரதமர் சந்திப்பு


ஜூலை,04,2013. இத்தாலிய பிரதமர் Enrico Letta, உரோம் மாநகர மேயர் Ignazio Roberto Maria Marino, உரோம் மாநகர முன்னாள் மேயர் Giovanni Alemanno ஆகியோரை இவ்வியாழக்கிழமையன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்களுக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் இவ்வரசு அதிகாரிகள் சந்தித்தனர்.
தற்போது இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்நோக்கும் சமூக மற்றும் பிற நெருக்கடிகள் குறித்தும், குறிப்பாக, வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளையோர் குறித்து கவனம் செலுத்துமாறு இச்சந்திப்புகளில் வலியுறுத்தப்பட்டது என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
அனைத்துலக சில அரசியல் விவகாரங்கள், குறிப்பாக, மத்தியதரைக்கடல் நாடுகள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி நாடுகளின் அரசியல் சூழல்கள் குறித்த கவலையும் இச்சந்திப்புகளில் வெளிப்படுத்தப்பட்டன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த உரோம் மாநகர மேயர் Marino, தான் வத்திக்கானுக்குச் சென்றது இதுவே முதல்முறை எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாசல்வரை வந்து தங்களை வரவேற்று, பின்னர் வழியனுப்பியதையும் பெருமிதத்தோடு பேசியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.