2013-07-03 15:09:41

பேராயர் Montenegro : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனித இதயங்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்


ஜூலை,03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa தீவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது அங்கு வாழும் புலம்பெயர்ந்த மக்களை மட்டுமல்ல, அம்மக்களுக்கு உதவும் குடிமக்களையும் ஊக்கப்படுத்த வருகிறார் என்று Agrigento பேராயர் Francesco Montenegro கூறினார்.
ஜூலை8, வருகிற திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa தீவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Montenegro, அண்மையில் அட் லிமினா சந்திப்பின்போது Lampedusa தீவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளுமாறு தான் அழைப்புவிடுத்ததாகக் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனித இதயங்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதை அவரின் இத்திருப்பயணம் உணர்த்துவதாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார் பேராயர் Montenegro.
இத்தாலியின் சிசிலித் தீவைச் சேர்ந்த Lampedusa தீவு, வட ஆப்ரிக்காவின் டுனிசியா நாட்டுக்கு ஏறக்குறைய 115 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னர், வட ஆப்ரிக்காவில் சனநாயக ஆதரவுக்கான “அரபு வசந்தம்” என்ற கிளர்ச்சி தொடங்கிய பின்னர் பல்லாயிரக்கணக்கான குடியேற்றதாரர்கள் கடல்வழியாக Lampedusa தீவுக்கு வந்துள்ளனர். இப்படி வரும் வழியில் படகுகள் கவிழ்ந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
இத்தீவுக்கு வந்துள்ள இந்த ஆப்ரிக்கக் குடியேற்றதாரருக்கு அத்தீவு மக்கள் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து உதவி வருகின்றனர் என்று பேராயர் Montenegro தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.