2013-07-03 15:13:03

நம்பிக்கை ஆண்டில் கர்தினால் Zen அவர்கள் வழங்கிவரும் மறைகல்வி வகுப்புக்கள்


ஜூலை,03,2013. நம்பிக்கை ஆண்டில் தான் வழங்கிவரும் மறைகல்வி வகுப்புக்களைக் குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் சொன்னபோது, அவ்விருவரும் மகிழ்ந்தனர் என்று ஹாங்காங் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Zen Ze-kiun கூறினார்.
அண்மையில் தான் வத்திக்கான் சென்றிருந்தபோது, ஓய்வில் இருக்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும், இந்நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்தது குறித்து, கர்தினால் Zen அவர்கள் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
நம்பிக்கை ஆண்டின் துவக்கத்திலிருந்து, ஒவ்வொரு புதன் கிழமையன்றும் கர்தினால் Zen அவர்கள் 90 நிமிடங்கள் நீடிக்கும் மறைகல்விப் பாடங்களை நடத்தி வருகிறார். இந்த வகுப்புக்கள் நடைபெறும் அரங்கத்தில் 100 பேர் மட்டுமே அமரமுடியும் என்பதால், இவ்வகுப்புக்கள் இணையத்தளத்தின் வழியாக, பல பங்குமக்களையும் தற்போது அடைந்து வருவதாக கர்தினால் Zen கூறினார்.
கர்தினால் Zen அவர்கள் இதுவரை வழங்கியுள்ள 40க்கும் அதிகமான மறைக் கல்விப் பாடங்கள், DVD ஒளித்தகடுகளில் பதியப்பட்டு, சீனாவில் உள்ள மக்களையும் அடையும் திட்டம் ஒன்று உள்ளது என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.