2013-07-03 15:19:37

நகர்ப்புறமயமாதலின் அதீத வளர்ச்சி, நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல், ஐ.நா. அறிக்கை


ஜூலை,03,2013. நகரங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும்வேளை, சேரிகளில் வாழும் மக்களுக்குக் குறைவுபடும் உள்கட்டமைப்புக்களையும், அடிப்படை வசதிகளையும் நிவர்த்தி செய்யாவிட்டால் ஒட்டுமொத்த முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
தற்போது நகரங்களில் 100 கோடியாகவுள்ள மக்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் 300 கோடியாக உயரும் என்ற விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக நிறுவனத்தின் 2013ம் ஆண்டின் ஆய்வறிக்கை, வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாதல் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
தற்போது உலக அளவில் 32 விழுக்காட்டு உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கை, 2050ம் ஆண்டுக்குள் மேலும் 230 கோடிப் பேருக்கு உணவளிக்கும் வகையில் உணவு உற்பத்திகள் அதிகரிக்கப்படுமாறும் கேட்டுள்ளது.
நலவாழ்வு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவுபடும் சேரிவாழ் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுமாறும் ஐ.நா. அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.