2013-07-02 14:48:01

நைஜீரியாவில் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்


ஜூலை,02,2013. நைஜீரியாவின் Benin City Edo மாநிலத்தில் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, அந்நாடு பண்பாடற்ற நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்று குறை கூறியுள்ளனர் ஆயர்கள்.
நைஜீரிய நாடு, மரண தண்டனையை இரத்து செய்வதில் பண்பாடுள்ள உலகத்தோடு சேருவதற்கு மிக அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றது என்று தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி தங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatous Ayu Kaigama தெரிவித்தார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் மரண தண்டனைகள் வழங்குவது 2006ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஜூன் 24ம் தேதியன்று நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது மூலம் இப்பழக்கம் நீக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டியிருந்தது. ஆயினும் அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் சிறையில் இதற்கான வசதிகள் இல்லாததால் அவரது தண்டனை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
நைஜீரிய அரசின் இந்நடவடிக்கையை உலகின் பல மனித உரிமை நிறுவனங்கள் குறை கூறியுள்ளன.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.