இந்தியாவில் இளம் பருவத்தினர் சாத்தானை வழிபடும் குழுக்களால் மயக்கப்படுவது குறித்து
கிறிஸ்தவ சபைகள் கவலை
ஜூலை,02,2013. வட கிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இளம் பருவத்தினர் சாத்தானை
வழிபடும் குழுக்களால் மயக்கப்படுகின்றனர் என்ற கவலையை அம்மாநிலத்தின் பல்வேறு கிறிஸ்தவ
சபைகள் வெளியிட்டுள்ளன. நாகாலாந்து தலைநகர் கோகிமாவில் கடந்த சில மாதங்களில் மட்டும்
மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளம்பருவத்தினர் சாத்தானை வழிபடும் குழுக்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்
எனவும், இவர்களை மீட்டெடுக்கும் பணிகளில் நாகாலாந்து கத்தோலிக்கப் பெண்கள் கழகத்தின்
தாய்மார் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை
குறித்து பல உள்ளூர் கிறிஸ்தவ குழுக்கள் Fides செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தியில்,
சாத்தானை வழிபடும் குழுக்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இளம்பருவத்தினரை மீட்டெடுக்கும் பணிகளைக்
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிரமாகச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளன. சாத்தானை
வழிபடும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும்
அமைதி ஆணையச் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம், இச்செய்தி அதிர்ச்சி தருவதாகவும், இந்த
நம்பிக்கை ஆண்டில் இத்தீமையை முற்றிலும் ஒழிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்
தெரிவித்தார்.