2013-07-01 14:27:41

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு உரையாடத் தெரியாதவர்கள் விடுதலை பெற்றவர்கள் அல்ல


ஜூலை,01,2013. இறைவனுக்கும், தன் மனச்சான்றின் குரலுக்கும் செவிமடுத்து, மனத்துணிவுடன் தன் தலைமைப் பணியைத் துறந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நமக்கெல்லாம் நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமக்கு எதுவெல்லாம் இயைந்ததாக உள்ளதோ, எதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அவைகளுக்கு அல்ல, மாறாக, இறைவனின் குரலுக்கும் நம் மனச்சான்றின் குரலுக்கும் செவிமடுப்பதன் மூலம் சிறந்த முடிவுகளை நாம் எடுக்க முடியும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உள்ளார் என்றார்.
சுதந்திரமாக இல்லாமலும், இறைவனோடு உரையாடத் தெரியாமலும் இருக்கும் கிறிஸ்தவர்களை இயேசு விரும்புவதில்லை, ஏனெனில் இறைவனோடு உரையாடத் தெரியாதவர்கள் விடுதலை பெற்றவர்கள் அல்ல எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று, உலகம் முழுவதும் கத்தோலிக்கக் கோவில்களில் திருத்தந்தையின் பிறன்பு நடவடிக்கைகளுக்கென நிதி திரட்டப்பட்டதைக் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, திருத்தந்தையர்களின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் இச்செயல்பாட்டிற்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.