2013-07-01 14:27:49

திருத்தந்தை பிரான்சிஸ் : மனஉறுதியுடனும் விடா முயற்சியுடனும் செபிக்க வேண்டும்


ஜூலை,01,2013. நம்முடைய செபம் ஆபிரகாமின் செயலைப்போல் மன உறுதி கொண்டதாகவும், விடாமுயற்சியுடையதாகவும் இருக்க வேண்டும் என இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களோடு இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, சோதோம் நகரை அழிவிலிருந்து காப்பாற்ற இறைவனோடு வாதாடிய ஆபிரகாமின் செயலை நம் செபத்திற்கு எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
நம் செபம் எப்போதும் மன உறுதி நிறைந்ததாய் இருக்கவேண்டும் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது என்றார் திருத்தந்தை.
நமக்கு இறைவனின் அருள் வேண்டுமெனில், அது மன உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் கேட்கப்படவேண்டும், அப்போதுதான் அது உண்மையான செபமாகும் என்றார் திருத்தந்தை.
“இறைவனுக்கு அனைத்தும் தெரியும். நீதிமான்கள் மீதும் பாவிகள் மீதும் அவர் மழையைப் பொழியச் செய்கிறார்" என இயேசு கூறிய வார்த்தைகளையும் இங்கு சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதே கருத்துடன்தான் ஆபிரகாமும் சோதோம் நகரை அழிவிலிருந்து காப்பாற்ற, இறைவனோடு வாதாடினார் என்றார்.
திருப்பாடல் 102ன் முக்கியத்துவத்தையும் மேற்கோள் காட்டி தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.