2013-06-29 15:26:51

மியான்மார் பெரிய மதங்களின் தலைவர்கள் : சமயக் காழ்ப்புணர்வுச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்


ஜூன்,29,2013. மியான்மாரில் இடம்பெறும் சமயக் காழ்ப்புணர்வு களையப்பட்டு, நாட்டின் நல்வாழ்வையும், நம்பிக்கை நிறைந்த வருங்காலத்தையும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டின் பெரிய மதங்களின் தலைவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாங்கூனில் அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதர் Derek Mitchell தலைமையில் அந்நாட்டின் பெரிய மதங்களின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் இறுதியில் அனைவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
யாங்கூன் கத்தோலிக்கப் பேராயர் Charlas Maung Bo உட்பட மியான்மாரின் புத்த மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அந்நாட்டில் சமய நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடும், அனைத்துலகச் சமுதாயமும் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மியான்மாரில் அண்மை மாதங்களில் முஸ்லீம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.