2013-06-29 15:27:53

போலந்து, உக்ரெய்ன் கத்தோலிக்கத் தலைவர்கள் ஒப்புரவுக்கு அழைப்பு


ஜூன்,29,2013. போலந்து மற்றும் உக்ரெய்ன் நாடுகளின் எல்லையிலுள்ள Volhyniaவில் படுகொலைகள் இடம்பெற்றதன் 70ம் ஆண்டு அண்மித்துவரும்வேளை, மன்னிப்பு மற்றும் ஒப்புரவுக்கு அழைப்புவிடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் இவ்விரு நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள்.
நாத்சிகளால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த Volhyniaவில் 1943ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி உக்ரேய்ன் தேசியவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் ஏறக்குறைய ஒரு இலட்சம் போலந்து நாட்டவரும், ஏறக்குறைய 20 ஆயிரம் உக்ரெய்ன் நாட்டவரும் கொல்லப்பட்டனர்.
இவ்வன்முறை இடம்பெற்றதன் 70ம் ஆண்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள போலந்து மற்றும் உக்ரெய்ன் நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள், இந்த இனவெறிக் கொலைகள் இடம்பெற்றதை ஏற்றுள்ள அதேவேளை, இவ்விரு நாட்டவரும் ஒருவரையொருவர் மன்னிக்குமாறு கேட்டுள்ளனர்.
உண்மை மட்டுமே நம்மை விடுதலையாக்கும் என்பதை அறிந்துள்ளோம், எனவே அது மன்னிப்புக்கு இட்டுச்செல்ல வேண்டுமெனவும் அத்தலைவர்களின் அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : CWN







All the contents on this site are copyrighted ©.