2013-06-29 15:20:31

திருத்தந்தை பிரான்சிஸ் : முழுவதும் அன்பும், முழுவதும் அருளும் உள்ள ஓர் இறைவனை நம்புவது எவ்வளவு மகிழ்ச்சியானது


ஜூன்,29,2013. பேரரசின் வல்லமையால் அல்ல, மாறாக, திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுலின் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும் மறைசாட்சி மரணத்தின் வல்லமையால் உரோம் திருஅவை உலகின் அனைத்துத் திருஅவைகளுக்கும் ஆதாரப்பூர்வமான இடமாக விளங்குகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்விரு புனிதர்களின் வாழ்வு பற்றி விளக்கி, இவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவில் இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் அனுபவித்தனர் எனவும் கூறினார்.
மேலும், சிமியோன் பேதுருவின் சகோதரர் பெலவேந்திரர் பற்றியும் குறிப்பிட்டு இப்பெருவிழாவில் கலந்து கொண்ட கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளுக்கும், அச்சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோவுக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை.
புனித பெலவேந்திரர் கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ சபையின் பாதுகாவலர் ஆவார்.
இந்நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் பாலியம் பெறும் பேராயர்களுக்காவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மேலும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் துன்புறும் மக்க்ளுக்காகச் சிறப்பாகச் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.