2013-06-29 15:17:45

திருத்தந்தை பிரான்சிஸ் : அனைத்து விசுவாசிகளையும் கிறிஸ்துவில் உறுதிப்படுத்திப் பலப்படுத்துவது திருத்தந்தையின் பணி


ஜூன்,29,2013. ஒருவர் இறைவனால் வழிநடத்தப்படுவதற்குத் தன்னை அனுமதித்து, கிறிஸ்து மற்றும் நற்செய்திக்கான அன்பால் நிறைந்து, ஒன்றிப்பின் ஊழியர்களாக வாழ்வதன் வழியாகவே ஆண்டவரை அறிவிக்க முடியும், இவற்றையே புனிதர்கள் பேதுரு, பவுல் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயர்களிடம் கூறினார்.
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 34 பேராயர்களுக்கு பாலியம் என்ற கழுத்துப்பட்டையை அணிவித்து, இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
உரோம் திருஅவையின் முதன்மைப் பாதுகாவலர்களாகிய திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஆயர்களின் பிரசன்னத்தில் இவ்விழாவைச் சிறப்பிப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“உறுதிப்படுத்து” என்ற சொல்லால் வழிநடத்தப்பட்ட பாப்பிறைப் பணி குறித்த மூன்று எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, விசுவாசத்தில், அன்பில், ஒற்றுமையில் உறுதிப்படுத்துவது குறித்து விளக்கினார்.
நமது எண்ணங்களையும், நமது உணர்வுகளையும் மனித அதிகாரம் குறித்த வாதப்போக்கையும் நம்மில் மேலோங்கச் செய்யும்போதெல்லாம், இறைவனாலும் விசுவாசத்தாலும் நாம் கற்பிக்கப்பட்டு வழிநடத்தப்படுவதற்கு நம்மை அனுமதிப்பதில்லை, மாறாக, நாம் இடறலான தடைகளாக மாறி விடுகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பில் உறுதிப்படுத்துவது குறித்து விளக்கிய திருத்தந்தை, நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று புனித பவுல் குறிப்பிட்ட போராட்டம், உலகெங்கும் தொடர்ந்து இரத்தத்தைச் சிந்தும் மனித ஆயுதங்களோடு நடத்தும் போராட்டங்களில் ஒன்றல்ல, மாறாக, இது மறைசாட்சி மரணத்தை வருவிக்கும் போராட்டம் எனவும் விளக்கினார்.
கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் தனது வாழ்வு முழுவதையும் கொடையாக வழங்கும் ஆயுதத்தைப் புனித பவுல் கொண்டிருந்தார், கிறிஸ்துமீது புனித பவுல் கொண்டிருந்த இத்தகைய அன்பில், எவ்விதப் பாகுபாடுகள், வரையறைகள் அல்லது எல்லைகளின்றி, தமது சகோதர சகோதரிகளை உறுப்படுத்தி வாழ்வதற்கே உரோம் ஆயர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று பேராயர்கள் பெற்றுள்ள பாலியம், உரோம் ஆயரோடும், உலகளாவியத் திருஅவையோடும் கொண்டுள்ள ஒன்றிப்பின் அடையாளமாகவுள்ளவேளை, திருஅவையில் பெரும் சொத்தாக இருக்கும் பல்வகைத்தன்மை, திருஅவையின் உடலைக் காயப்படுத்தும் ஒவ்வொரு மோதலையும் மேற்கொள்வதற்கானப் பணிசெய்வதற்கு எப்போதும் நம்மைத் தூண்ட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் .
கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதே, கிறிஸ்தவர்கள் என்ற வகையில் நமது வாழ்வின் ஒளி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி, விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு, டில்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 34 பேராயர்கள் இச்சனிக்கிழமையன்று 'பாலியம்' எனப்படும் கழுத்துப்பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.