2013-06-28 15:46:08

திருத்தந்தை பிரான்சிஸ் Ecumenical கிறிஸ்தவ சபையிடம் : உரையாடல் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை


ஜூன்,28,2013. கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு, இறைவனிடமிருந்து பெறும் கொடை என்பதால் அதற்காக இடைவிடாது செபிக்க வேண்டும், ஆயினும், இந்த அசாதாரண அருளைப் பெறுவதற்கு நம் இதயங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று கான்ஸ்டான்டிநோபிள் Ecumenical கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கான்ஸ்டான்டிநோபிள் Ecumenical முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோ அவர்களின் பிரதிநிதி குழு, புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவாகிய ஜூன் 29ம் தேதி வத்திக்கானுக்கும், புனித பெலவேந்திரர் விழாவாகிய நவம்பர் 30ம் தேதி திருத்தந்தை அவர்களின் பிரதிநிதி குழு இஸ்தான்புல்லுக்கும் ஆண்டுதோறும் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வியாழனன்று உரோம் வந்துள்ள Ecumenical கிறிஸ்தவ சபை பிரதிநிதி குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நமது இரு சபைகளுக்கும் பொதுவாக இருக்கின்ற விவகாரங்கள் குறித்து, அதேசமயம் நம்மை இன்னும் பிரிக்கும் விவகாரங்களை மறைக்காமல், உண்மையிலும் அன்பிலும் நாம் சேர்ந்து சிந்திப்பதற்கு இன்று இயலுவது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
இந்த நமது ஒன்றிணைந்த முயற்சி தக்ககாலத்தில் பலன்தரும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உண்மையான உரையாடல் நடத்துவதற்கு நாம் பயப்படக் கூடாது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.