2013-06-27 16:41:01

ஜப்பான் தலத்திருஅவை மேற்கொள்ளும் 'அமைதிக்கான பத்து நாட்கள்' முயற்சி


ஜூன்,27,2013. மனித மாண்பைப் பாதுக்காப்பதன் வழியாகவே உண்மையான அமைதியை உலகில் நிலை நிறுத்த முடியும் என்ற மையக்கருத்துடன் கூடிய மடல் ஒன்றை ஜப்பான் ஆயர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட 'உலகில் அமைதி' (Pacem in Terris) என்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி முடிய 'பத்துநாள் அமைதி' என்ற முயற்சியில் ஈடுபட Tokyo வின் பேராயர் Peter Takeo Okada அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெர்மன் நாட்டைப் பிரிக்கும் பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது (1961), அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் சூழலை உருவாக்கிய கியூபா ஏவுகணை விவகாரம் (1962) என்ற இரு முக்கிய நிகழ்வுகளை அடுத்து, 1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்டது.
உண்மை, நீதி, பிறரன்பு, விடுதலை ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைதி நிலவமுடியும் என்பதை திருத்தந்தையின் சுற்றுமடல் வெளிப்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டும் பேராயர் Okada அவர்களின் மடல், உண்மையான, நிலையான அமைதி, ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கப்படும் மதிப்பில் அடங்கியுள்ளது என்பதைக் கூறுகிறது.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அணுகுண்டுகள் வீசப்பட்ட இரு நாட்களையும் உள்ளடக்கி, ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி முடிய 'அமைதிக்கான பத்து நாட்கள்' என்ற முயற்சியை ஜப்பான் தலத்திருஅவை மேற்கொள்ளவிருக்கிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.