2013-06-27 16:43:32

சிரியாவில் துன்புறும் மக்களுக்கு இரஷ்யாவில் உள்ள கோவில்களில் நிதி திரட்டும் முயற்சி


ஜூன்,27,2013. விவிலியம் உருவான பகுதியில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து வாழ்ந்த நிலை மாறி, தற்போது அங்கு புனிதத் தலங்கள் சீரழிக்கப்படுவதும், கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதும் வருத்தத்தைத் தருகிறது என்று மாஸ்கோவில் உள்ள இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill கூறியுள்ளார்.
சிரியாவில் தற்போது பல வழிகளில் துன்புறும் மக்களுக்கு உதவிகள் செய்யும் நோக்கத்தில், மாஸ்கோவின் அனைத்துக் கோவில்களிலும் நிதி திரட்டப்பட வேண்டும் என்று முதுபெரும் தலைவர் Kirill, இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இரஷ்யாவில் புரட்சியும், உள்நாட்டுப் போரும் நிகழ்ந்த காலங்களில் மக்கள் அடைந்த துன்பங்களைப் போலவே, தற்போது, சிரியாவில் மக்கள் துன்பப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தலைவர் Kirill, அங்குள்ள மக்களின் துன்பங்களுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்று கூறினார்.
இரஷ்யாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் மிக அதிக அளவு நிதி திரட்டும் முயற்சியில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை இறங்கியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.