2013-06-27 16:03:56

கற்றனைத்தூறும்..... இப்பூமியின் மிகத் தாழ்வான இடம்


இப்பூமியில் மிகத் தாழ்வான இடத்தில் அமைந்துள்ள இடம் சாக்கடல். கடல் மட்டத்துக்குக் கீழே 423 மீட்டர் (1,388 அடி) ஆழத்தில் அமைந்துள்ள சாக்கடல், ஜோர்டனுக்கு கிழக்கே, இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு(West Bank) மேற்கே, முழுவதும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. 377 மீட்டர் (1,237 அடி) ஆழமுடைய இந்தச் சாக்கடலின் நீர், பெருங்கடல்களின் நீரிலுள்ள உப்புத்தன்மையைவிட 8.6 மடங்கு உப்புத்தன்மையை அதிகமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு சாக்கடல், உலகிலே மிக ஆழமான, அதிகமான உப்புத்தன்மையைக் கொண்டுள்ள இடமாகவும் உள்ளது. இதனால் சாக்கடல், உப்புக் கடல் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும், இதிலுள்ள அதிக அளவான உப்புத்தன்மையால் இங்கு உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே உப்புக் கடலுக்கு, சாக்கடல் என்னும் பெயரும் எழுந்தது. இதனை சாக்கடல் என்று சொல்வதைவிட ஓர் உப்பு நீர் ஏரி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். உலகில் Djibouti நாட்டின் Assal ஏரி, Turkmenistan குடியரசின் Garabogazköl Aylagy ஏரி, இன்னும், அண்டார்டிக்காவிலுள்ள Don Juan Pond ஏரி போன்ற சில ஏரிகளில் உப்புத்தன்மை அதிகமாக இருந்தாலும், சாக்கடலின் நீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது. இப்பூமியின் மேல்ஓடுகளில் ஏற்படும் விரிசலால் இக்கடலின் ஆழம் தற்போது தொடர்ந்து கீழிறங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. சாக்கடலின் நீரில் மக்னீசியம் குளோரைட் 53 விழுக்காடும், பொட்டாசியம் குளோரைட் 37 விழுக்காடும், சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) 8 விழுக்காடும், பல்வேறு உப்புக்கள் 2 விழுக்காடும் உள்ளன. சாக்கடலின் நீரிலும் மண்ணிலும் விசேட மருத்துவக் குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இக்கடல்மண் சொரியாசிஸ் உட்பட சில தோல் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. எனவே சாக்கடல், உலகில் நலவாழ்வளிக்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது. சாக்கடல் நீர் மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அதில் மனிதர்கள் மூழ்குவது சிரமம். அதனால் மனிதர்கள் அதில் மிதக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாக்கடல் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
சாக்கடலின் நீளம் 55 கி.மீ (34 மைல்), மிகுதியான அகலம் 18 கி.மீ(11 மைல்). ஜோர்டனின் பெரும்பிளவுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சாக்கடலுக்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன. சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும், ஒட்டகம், முயல், நரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இசுரேல், ஜோர்டான் நாடுகள் இயற்கைப் புகலிடங்களை இப்பகுதியில் அமைத்துள்ளன. ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத்தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன. உலகிலேயே மிக நீண்ட காலமாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்துவரும் இடமாக, சாக்கடலுக்கு அருகேயுள்ள எரிக்கோ நகரம் இருப்பதாக நம்பப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமோரா நகரங்கள் சாக்கடலின் தென்கிழக்குக் கரைக்கு அருகில் அமைந்திருந்தன என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சவுல் அரசர் தாவீதைக் கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கு அருகிலுள்ள எய்ன்கெடியில் அமைந்துள்ளது. எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் நிறுவன உரிமம் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : விக்கிப்பீடியா








All the contents on this site are copyrighted ©.