2013-06-27 16:40:03

உத்தரகாந்த் மாநிலத்தில் உடனடி உதவிகள் செய்யாவிடில், காலரா நோய் பரவும் ஆபத்து அதிகம் - காரித்தாஸ் அதிகாரி


ஜூன்,27,2013. இந்தியாவின் உத்தரகாந்த் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோரின் எண்ணிக்கை ஓர் ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று அரசு தற்போது ஒத்துக் கொண்டாலும், இந்த அழிவைக் காணும்போது, இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கும் என்று தான் எண்ணுவதாக, இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
இந்த மழை மற்றும் வெள்ளத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிஜ்னோர் (Bijnor) மறைமாவட்டத்தின் ஆயர் John Vadakel அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
இந்த இயற்கை அழிவுகளில் 10,000க்கும் 15,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று அரசு அதிகாரி ஒருவர் Times of India நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான முதல் சுற்று உதவிகளை காரித்தாஸ் ஆற்றியுள்ளது என்று Babita Alick என்ற காரித்தாஸ் அதிகாரி ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அரசும் அனைத்து பணி அமைப்புக்களும் போர்கால அடிப்படையில் உதவிகள் செய்யாவிடில், இப்பகுதிகளில் காலரா போன்ற நோய்கள் பரவும் ஆபத்து அதிகம் உள்ளதென்று Babita Alick சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : CNS / AsiaNews








All the contents on this site are copyrighted ©.