2013-06-26 16:14:42

நடைபெறவிருக்கும் இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு - கர்தினால் Stanislaw Rylko


ஜூன்,26,2013. வருகிற ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் இவ்வேளையில், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இந்த இளையோர் நாளைக் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் இந்த 28வது இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு என்று, இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வரும் பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த இளையோர் நாள் நிகழ்வுகள், 26 ஆண்டுகளுக்கு முன்னர் Argentina நாட்டின் Buenos Aires நகரில் நடைபெற்றது என்றும், அந்நகரில் பேராயராக பணியாற்றிய கர்தினால் பெர்கோலியோ அவர்கள் தற்போது திருத்தந்தை என்பதையும் கர்தினால் Rylko தன் செய்தியில் குறிப்பிட்டார்.
ஒவ்வவொரு முறையும் இளையோர் நாள் நிகழும்போது, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கத் திருஅவையில் நம்பிக்கை வளர்க்கப்படுகிறது என்று கூறிய கர்தினால் Rylko அவர்கள், நம்பிக்கை ஆண்டில் நடைபெறும் இந்த இளையோர் நாள் இன்னும் அதிகமான நம்பிக்கையை நம்மில் வளர்க்கும் என்ற தன் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.