2013-06-26 16:25:57

சட்டப்பூர்வ போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு - ஐ.நா. அலுவலகம்


ஜூன்,26,2013. சட்டப்பூர்வமான போதை மருந்துகளின் பயன்பாடு, அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதாக போதை மருந்து மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அலுவலகம் - The United Nations Office on Drugs and Crime (UNODC) - எச்சரித்துள்ளது.
Heroin மற்றும் Cocaine போன்ற பாரம்பரிய போதை மருந்துகளின் பயன்பாடு உலக அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, புதிய போதைப் பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வழி அறியாது அதிகாரிகள் திகைத்திருப்பதாகவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
இந்தப் புதிய வகை போதை மருந்துகள் பாரம்பரிய போதைப் பொருட்களை விட பல மடங்கு ஆபத்தானவை என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வகையான புதிய போதை மருந்துகள் பெரும்பாலும் ஆசியாவிலேயே உற்பத்தியாவதாகவும், இணையதளத்தின் மூலம் அவை பரப்பப்படுவதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
இது ஓர் உலகளாவியப் பிரச்சனை என்றாலும், இந்தப் போதைப்பொருள் விற்பனைக்கு, வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் பெரிய சந்தைகளாகத் திகழ்கின்றன என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஜூன் 26, இப்புதனன்று, போதைப்பொருள் வர்த்தகத்தையும், பயன்பாட்டையும் எதிர்க்கும் உலக நாள் (International Day against Drug Abuse and Illicit Trafficking) கடைபிடிக்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.