2013-06-26 14:50:14

அன்னைமரியாத் திருத்தலங்கள் – லுகான் அன்னைமரியா திருத்தலம், அர்ஜென்டினா


ஜூன்,26,2013. உலகிலுள்ள அன்னைமரியாத் திருத்தலங்களின் வரலாறு பற்றி வாசிக்க வாசிக்க அவ்வன்னை மனிதர்களாகிய நம்மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர முடிகிறது. நமது தேவைகளைத் தனது மகன் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவதில் அந்தத் தாய் முனைப்பாய் இருக்கிறார். அதனால்தான் அத்தாய்க்கென எழுப்பப்பட்டுள்ள திருத்தலங்களில் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு செல்கின்றனர். இத்திருத்தலங்கள் ஒவ்வொன்றின் வரலாற்றுக்குப் பின்னணியாக, அன்னைமரியாவின் காட்சி அல்லது அவ்வன்னையின் திருவுருவத்தினால் இடம்பெற்ற புதுமைகள் இருக்கின்றன. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 16ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டுவரும் லுகான் அன்னைமரியாத் திருவுருவம் புகழ்மிக்க ஒரு நிகழ்வைக் குறித்து நிற்கின்றது. இந்தத் திருவுருவம் இன்றும் அர்ஜென்டினாவின் லுகான் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வன்னையின் திருவிழா மே 8ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகிறது.
இந்த லுகான் அன்னைமரியின் பரிந்துரையால் இக்காலத்தில் நடைபெற்ற ஒரு புதுமை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் ஒரு மறையுரையில் குறிப்பிட்டார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாகவே செபம் செய்தால் நாம் கேட்கும் வரம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி ஒரு புதுமையையும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அர்ஜென்டினாவில் ஒரு தம்பதியரின் மகள் கடும் காய்ச்சலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சிறுமி உயிர்பிழைக்கமாட்டார் என மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர். உடனடியாக அச்சிறுமியின் தந்தை பேருந்தில் ஏறி அங்கிருந்து ஏறக்குறைய 70 கிலோ மீட்டரில் இருக்கின்ற Zelaya நகரின் லுகான் அன்னைமரியா பசிலிக்கா சென்றார். அவர் அவ்விடத்தை அடைந்தபோது இரவு மணி 9. பசிலிக்காவைப் பூட்டி விட்டனர். இவர் மனந்தளராமல் பசிலிக்காவின் வெளியிலுள்ள இரும்புக்கம்பிக் கதவைப் பிடித்தவாறு முழந்தாளிட்டு இரவெல்லாம் கண்ணீரோடு செபித்தார். காலையில் மீண்டும் பேருந்தில் ஏறி அந்த மருத்துவமனையை அடைந்தார். மருத்துவமனையில் அவரது மனைவி, தங்களது மகளுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது, மகள் பிழைத்துக்கொள்வார் என மருத்துவர்கள் கூறியதைக் கண்ணீருடன் விவரித்தார். பின்னர் அச்சிறுமியும் பிழைத்துக் கொண்டார். லுகான் அன்னைமரியா செய்த புதுமையைக் கண்டு அக்குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டு, அத்தாய்க்கு நன்றி செலுத்தினர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்த நாடான அர்ஜென்டினாவிலுள்ள இந்த லுகான் அன்னைமரியாத் திருவுருவம் அர்ஜென்டினாவுக்கு அனுப்பப்படுவதற்காக பிரேசில் நாட்டில் செய்யப்பட்டது. அர்ஜென்டினாவில் வாழ்ந்த போர்த்துக்கல் நாட்டுக் குடியேற்றதாரர் ஒருவர், தான் வாழ்ந்த Santiago del Estero என்ற பகுதியில் கத்தோலிக்க விசுவாசத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்க விரும்பி அன்னைமரியா பெயரில் ஓர் ஆலயம் கட்ட விரும்பினார். அதனால் 1630ம் ஆண்டில் அமலமரி திருவுருவத்தைச் செய்யுமாறு ஒரு சிற்பியிடம் கேட்டார். இத்திருவுருவம் செய்யப்பட்டு அர்ஜென்டினாவின் Buenos Aires துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மாட்டு வண்டியில் Santiago del Esteroக்கு எடுத்துச் செல்லப்பட்டது. போகும் வழியில் லுகான் ஆற்றங்கரையில் அந்த வண்டி மாடுகள் நின்று விட்டன. மாடுகள் ஆற்றைக் கடக்க மறுத்துவிட்டன. அந்த இடத்தில் மாடுகளை எவ்வளவோ அடித்துப் பார்த்தும் அவை நகரவில்லை. அந்த அமலமரித் திருவுருவம் வைக்கப்பட்டிருந்த பெட்டி அந்த வண்டியில் இருக்கும்வரை அந்த மாடுகள் நகரவே இல்லை. பல தடவைகள் பல வழிகளில் முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் அந்த வண்டியை விட்டு அப்பெட்டியை இறக்கியவுடன் அந்த மாடுகள் நகர்ந்தன. எனவே லுகானில் அன்னைமரியா கோவில்கொள்ள விரும்புகிறார் என்பதை அவ்வூர் மக்கள் புரிந்து கொண்டனர். அந்த இடம் தற்போதைய Zelaya நகரமாகும்.
வண்டி மாடுகள் நின்ற அந்த இடத்துக்கு அருகிலிருந்த Don Rosendo Oramas என்பவரின் வீட்டுக்கு மக்கள் இந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுத்துச் சென்றனர். Don Rosendo Oramas, அன்னைமரியாவுக்கென ஒரு சிறிய ஆலயம் கட்டினார். அந்த முதல் ஆலயம் நாற்பது ஆண்டுகள இருந்தன. பின்னர் அவ்விடத்தில் 1685ம் ஆண்டில் பெரிய திருத்தலம் கட்டப்பட்டது. 19ம் நூற்றாண்டில் மீண்டும் புதிய திருத்தலம் கட்டப்பட்டது. இவ்வன்னையின் புகழை அறிந்த திருத்தந்தை 13ம் சிங்கராயர், 1886ம் ஆண்டில் லுகான் அன்னைமரியா திருவுருவத்துக்கு திருஅவை ஒழுங்குப்படி முடிசூட்டத் தீர்மானித்தார். லுகான் அன்னைமரியாவுக்குச் சூட்டப்பட்டுள்ள கிரீடமானது சுத்தத் தங்கத்தாலானது. இக்கிரீடத்தில், வைரம், மாணிக்கம், மரகதம், நீலமாணிக்கம் என 365 கற்களும், 132 முத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அர்ஜென்டினா குடியரசு மற்றும் பேராயரின் அதிகாரப்பூர்வ அடையாளச் சின்னங்களைக் கொண்ட தகடுகளும் உள்ளன. களிமண்ணாலான இத்திருவுருவம் 2 அடி உயரம் கொண்டது.
1930ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பத்திநாதர் லுகான் அன்னைமரியாவை, அர்ஜென்டினா, உருகுவாய், பரகுவாய் ஆகிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார். திருத்தந்தையர் 11ம் கிளமெண்ட், 14ம் கிளமெண்ட், 6ம் பத்திநாதர், 9ம் பத்திநாதர், 11ம் பத்திநாதர், 12ம் பத்திநாதர், 13ம் சிங்கராயர் போன்றோர் இவ்வன்னைமரியை கவுரவித்துள்ளனர். அர்ஜென்டினாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே 1982ம் ஆண்டில் நடைபெற்ற Falklands சண்டையின்போது முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த லுகான் அன்னைமரியா திருத்தலம் சென்றார். இத்திருப்பயணத்தின்போது இத்திருத்தலத்தின் முன்பாக திருப்பலி நிகழ்த்தி இந்த லுகான் அன்னைமரியா திருவுருவத்துக்கு தங்க ரோஜாவைக் காணிக்கையாகக் கொடுத்தார் திருத்தந்தை 2ம் ஜான் பால். மேலும், அமெரிக்கக் கண்டத்தில் மெக்சிகோவின் குவாதாலூப்பே அன்னைமரியா, பிரேசிலின் அப்பரெசிதா அன்னைமரியா ஆகிய திருவுருவங்களுக்கு மட்டுமே திருத்தந்தையர் தங்க ரோஜாவைக் காணிக்கையாகக் கொடுத்துள்ளனர். இப்படித் தங்க ரோஜாவைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கத்தை திருத்தந்தை 9ம் லியோ 1049ம் ஆண்டில் தொடங்கினார் என்று சொல்லப்படுகிறது.
அன்பு நேயர்களே, தன்னைத் தேடிவரும் பிள்ளைகளுக்குத் தினமும் புதுமைகள் செய்யும் அன்னை மரியிடம் நாமும் நம்பிக்கையோடு செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.