2013-06-25 15:26:15

விவிலியத் தேடல் நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் உவமை - பகுதி 2


RealAudioMP3 ஜூன் 26, இப்புதனன்று, இரு உலக நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன. International Day against Drug Abuse and Illicit Trafficking, மற்றும், International Day in Support of Victims of Torture. போதைப்பொருள் வர்த்தகத்தையும், பயன்பாட்டையும் எதிர்க்கும் உலக நாள், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உலக நாள். மனதை வதைக்கும் பல கேள்விகளை எழுப்பும் இரு உலக நாட்கள் இவை. இவ்விரு நாட்களும் ஒரே தேதியில் இணைந்து வருவதை நாம் ஒரு வாய்ப்பாகக் கருதலாம். இதுமட்டுமல்லாது, ஜூன் 23, கடந்த ஞாயிறன்று 'அகில உலக கைம்பெண்கள் நாளை'யும் நாம் கடைபிடித்தோம். 'நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்' என்ற உவமையைச் சிந்திக்கும் இத்தருணத்தில் இம்மூன்று உலக நாட்களையும் இணைத்துச் சிந்திக்க நமக்குக் கிடைத்துள்ள இத்தருணத்தை அருள் நிறைந்த ஒரு வாய்ப்பாக, நமது செபங்களை எழுப்பக்கூடிய ஒரு வாய்ப்பாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

போதைப்பொருட்களையும், சித்ரவதைகளையும், கைம்பெண்களையும் மையப்படுத்தும் இந்த மூன்று உலக நாட்களை பல்வேறு கண்ணோட்டங்களில் நாம் சிந்தித்துப் பார்க்கமுடியும். ஆயினும், நாம் தற்போது சிந்திக்கும் இந்த உவமையை மனதில் கொண்டு எண்ணிப்பார்த்தால், நமது நினைவுகளில் நிழலாடுவது, இளையோரும், அவர்களை நம்பி வாழும் குடும்பங்களும்... சிறப்பாக, போதைப்பொருட்களுக்குப் பலியாகும் எண்ணற்ற இளையோரையும், காவல்துறை, இராணுவம், தீவிரவாதக் குழுக்கள் ஆகிய அமைப்புகளால் சித்ரவதைகளுக்கு உள்ளாகும் இளையோரையும், இவ்விளையோரை மட்டுமே நம்பி வாழும் விதவைத் தாய்களையும் இறைவனின் சன்னிதிக்குக் கொணர இன்று ஒரு நல்ல தருணம்.

ஆயுத வர்த்தகமும், போதைப்பொருள் வர்த்தகமும் உலகில் இன்று மிக வெற்றிகரமாக நடைபெறும் இரு வர்த்தகங்கள். இவ்விரண்டிலும், பன்னாட்டு அரசுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. இவை நடைபெறுகின்றன என்பது தெரிந்தும், தெரியாததுபோல் தன் கண்களை மூடிக்கொள்ளும் நீதித்துறையும், காவல்துறையும் இந்த வர்த்தகங்கள் செழிப்பதற்குத் துணைபோகின்றன. அரக்கத்தனமான வெறியுடன் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தால், கோடிக்கணக்கான இளையோர் ஒவ்வொரு நாளும் பலியாகின்றனர்.
போதைப்பொருள் வர்த்தகம் என்ற அரக்கனை அழிக்க, சட்டமும், காவல்துறையும் உள்ளனவென்று நம்பியிருக்கும் பல கோடி குடும்பங்களுக்கு, நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகளே காத்திருக்கின்றன. இதில் கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால், நீதிக்காகப் போராடும் பல இளையோரைப் பழிவாங்குவதற்கு, காவல் துறையினர் பயன்படுத்தும் ஆயுதம்... போதைப்பொருட்கள். அரசையும், நீதித் துறையையும், காவல்துறையையும் எதிர்த்துப் போராடும் பல இளையோர், போதைப்பொருள் வைத்திருப்பதாக, பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். போதைப்பொருள் என்ற வழக்கில், நீதிமன்றம் செல்லாமலேயே காவல் நிலையங்களில் சித்ரவதைகள் மேற்கொள்ள வழிகள் இருப்பதால், காவல் துறை அதிகாரிகள் இவ்விளையோரைப் பழிவாங்கப் பயன்படுத்தும் ஆயுதம் போதைப்பொருள். இவ்விதம் கைது செய்யப்படும் பல கோடி இளையோர், சிறைகளில் கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகி, கொல்லப்படுவதும் நாம் அடிக்கடி கேட்கும் செய்திகள்.
போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் வர்த்தகம், அநீதியான கைதுகள், சித்ரவதைகள் என்ற இக்கொடுமைகள் அனைத்திலும் அரசும், காவல்துறையும் துணைபோனாலும், நீதி மன்றங்களில் தங்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் ஏழைக் குடும்பங்களுக்கு நீதி மன்றங்களில் கிடைப்பதும் அதிர்ச்சிகளே!

இவ்வாறான கோணங்களில் நாம் சிந்திக்கும்போது, ஜூன் 23, 26 ஆகிய தேதிகள் நம் கண்முன் நிறுத்துவது... போதைப்பொருட்களாலும், சித்ரவதைகளாலும் இறந்துபோகும் இளையோர், அதனால், சிதைந்து போகும் குடும்பங்கள், குறிப்பாக, இந்த அநீதியால் நொறுங்கிப்போகும் விதவைத் தாய்கள்... கைம்பெண்களான இந்த அன்னையரை இன்று நம் மனங்களில் தாங்கி இறைவனை நெருங்குவோம். இந்த அன்னையருக்குத் தேவையான நம்பிக்கையை, நமது உவமையில் கூறப்பட்டுள்ள கைம்பெண் வழங்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் நம் தேடலைத் தொடர்வோம்.

இருவாரங்களுக்கு முன், 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையைச் சிந்தித்தபோது, William Holman Hunt என்ற ஓவியர் வரைந்திருந்த ஓர் ஓவியத்தைப்பற்றி குறிப்பிட்டோம். இந்த உவமையின் நாயகன் இரவில் தன் நண்பர் இல்லத்தில் கதவைத் தட்டிக் கொண்டிருப்பதற்குப் பதில் முட்டிக் கொண்டிருப்பதுபோல் அமைந்த அந்த ஓவியம், இந்த நாயகனின் விடாமுயற்சியை அழகாக வெளிப்படுத்துகிறது என்று கூறினோம். நாம் தற்போது சிந்திக்கும் 'நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்' என்ற உவமையை மற்றோர் ஓவியர் அழகாக வரைந்துள்ளார். John Everett Millais என்ற ஓவியர் 1863ம் ஆண்டு வரைந்துள்ள இந்த ஓவியத்தில், கைம்பெண்ணின் விடாமுயற்சி அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரயேல் குலத்தைச் சேர்ந்த நடுவர் ஒருவர் அரியணை போன்று அமைந்துள்ள ஓர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவரைச் சுற்றி பல பணியாளர்கள்... ஒருவர் நடுவருக்குச் சாமரம் வீசுகிறார்; மற்றொருவர் அருகே தரையில் அமர்ந்து குறிப்பெழுதுகிறார்; வேறு இருவர், அரியணைக்குப் பின்புறம் நிற்கின்றனர். இவ்விதம், அடியாட்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் நடுவரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்தவண்ணம் முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறார் பெண் ஒருவர். அந்தப் பெண்ணைக் காண விரும்பாமல், சலிப்புடன், வெறுப்புடன் தலையை மறுபக்கம் திருப்பியபடி அமர்ந்துள்ளார் நடுவர். நடுவரின் கால்களைக் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கும் கைம்பெண்ணின் கரங்களை, பலவந்தமாக அப்புறப்படுத்தும் முயற்சியில் மற்றொரு அடியாள் ஈடுபட்டுள்ளார்.

மனதைக் காயப்படுத்தும் காட்சி இது. ஆனால், இதையொத்த, அல்லது, இதையும் விட கொடுமையான பல காட்சிகளை இன்றும் நாம் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும், நீதி மன்றங்களிலும் காணமுடியும். இவ்விதம் போராடும் கைம்பெண்களின் வெற்றிக்கதை ஒன்றைச் சொல்லலாம் என்று ஊடகச்செய்திகளில், இணையத்தளத்தில் நான் தேடியபோது, என் தேடல் நீண்டுகொண்டே போனது.
கணவனை இழந்து, உடல் நலத்தையும் இழந்து, இறுதியில் பணியையும் இழக்கும் ஆபத்தில் இருந்த காவல்துறை உதவி மேலாளர் மாலதி என்ற கைம்பெண், சென்னை உயர்நீதி மன்றத்தில் போராடி வெற்றிபெற்ற நிகழ்வை, இத்திங்களன்று 'வாரம் ஓர் அலசல்' நிகழ்ச்சியில் கேட்டு பயனடைந்தோம். இத்தகைய வெற்றிக் கதைகள் ஊடகங்களில் தோன்றுவது மிக அரிது... இந்த வெற்றிக் கதைக்கு உறுதுணையாக இருந்த நீதிபதி சந்துரு போன்ற ஒருவரைக் குறித்து நாம் கேட்கும் அதே நேரத்தில், அநீதியாக நடந்துகொள்ளும் நூறு நீதிபதிகளைக் குறித்து நாம் கேட்கும் கதைகளே ஊடகங்களில் நிறைந்து வழிகின்றன.

இவ்விதம் அடிக்கடி வெளியாகும் அவலமானச் செய்திகளைக் கேட்டு, நீதிபதிகள் வெட்கப்பட்டு, மனம் திருந்தி நடப்பார்கள்; எனவே, இத்தகையச் செய்திகள் ஊடகங்களில் குறையும் என்று எதிர்பார்த்தால், நாம் ஏமாந்து போவோம். நேர்மையற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை.
இதற்கு மாறாக, போராடும் கைம்பெண்கள் அடையும் வெற்றிக் கதைகள் நமது ஊடகங்களில் அடிக்கடி பேசப்படுவதில்லை. இவர்களை நமது விவிலியத்தேடல் மூலம் நாம் உயர்த்திப் பிடிக்கவேண்டும். இவர்களது விடாமுயற்சி, உலகில் வாழும் இன்னும் பல கோடி கைம்பெண்களுக்கு உறுதி அளிக்கவேண்டும்.

'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்ற பழமொழிக்கு மிகவும் பொருத்தமான, உயர்ந்ததோர் எடுத்துக்காட்டு, லூக்கா நற்செய்தி 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள கைம்பெண். உருவத்தில் மிகச் சிறிய எறும்பு, தன் உடல் வலிமையைக் கொண்டு, கல்லைத் தேய்ப்பதில்லை. தனது விடாமுயற்சியைக் கொண்டே கல்லைத் தேய்க்கிறது. விடாமுயற்சி என்ற கருத்தை வெளிப்படுத்தவே இந்தப் பழமொழி பயன்படுத்தப்படுகிறது. எறும்புகள் எப்போதும் வரிசையாக, தொடர்ச்சியாக, சாரை, சாரையாகச் செல்வதைக் காணலாம். இந்தத் தொடர் முயற்சியால், எந்த ஒரு கடினமான மேல்பரப்பிலும் எறும்புகள் பாதையொன்றை பதிக்கின்றன. எறும்பின் தொடர்முயற்சியே அதன் வலிமை.

"மக்கள் மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்" என்பதை எடுத்துரைக்க, இயேசு இந்த உவமையைக் கூறினார் என்று நற்செய்தியாளர் லூக்கா இந்த உவமையின் துவக்கத்தில் கூறியுள்ளார். ஆனால், உவமையின் இறுதியில் இயேசு கூறும் வார்த்தைகள் நம்மை ஓரளவு பாதிக்கின்றன:
"அல்லும் பகலும் தம்மை நோக்கி கூக்குரலிடும் மக்களுக்கு கடவுள் நீதி வழங்குவார்" என்று உறுதி அளிக்கும் இயேசு, தொடர்ந்து கூறும் சொற்களே நம்மில் பாதிப்பை உருவாக்குகின்றன. "ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்ற கேள்வியுடன் இயேசு இந்த உவமையை முடிக்கிறார்.

மனித சமுதாயம் உருவாக்கியுள்ள பல அமைப்புக்களான குடும்ப உறவுகள், நண்பர்கள் வட்டம், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், மதம் சார்ந்த அமைப்புக்கள், அரசுத் துறைகள் என்று பல அமைப்புக்களிலும் நமக்கு நீதி கிடைக்காதபோது, நாம் நாடிச் செல்லும் புகலிடம் நீதிமன்றங்கள். அங்கும் அநீதி ஆட்சி செய்தால், நமது நம்பிக்கை என்ன ஆகும்? குறிப்பாக, நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் நம்பி வரும் ஏழைகள் நம்பிக்கையுடன் வாழ முடியுமா? இக்கேள்விகளுக்கு ஏழை கைம்பெண்ணிடமிருந்து நாம் பதில்களையும், பாடங்களையும் தேடுவோம், நம் அடுத்தத் தேடலில்...








All the contents on this site are copyrighted ©.