2013-06-25 15:58:39

யாங்கூன் பேராயர் : சமய மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலின் கருவி


ஜூன்,25,2013. பதட்டநிலைகளும் பயமும் நிலவும் மியான்மாரில் மதங்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலை ஊக்குவித்து வருகின்றது என்று யாங்கூன் பேராயர் Charles Maung Bo கூறினார்.
மியான்மாரில் புத்தமதத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் வகுப்புவாத வன்முறையையும் தூண்டிவரும்வேளை, சில புத்தமத பிக்குகள், வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் புகலிடம் அளித்து வருவதோடு அமைதி மற்றும் ஒப்புரவுக்கு அழைப்புவிடுக்கும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர் என்று கூறினார் பேராயர் Bo.
மியான்மாரின் தற்போதைய நிலைமை குறித்து Fides செய்தி நிறுவனத்துக்கு இவ்வாறு தகவல் தெரிவித்துள்ள பேராயர் Bo, அந்நாட்டின் சமயத் தலைவர்களையும் பொது மக்கள் சமுதாயத்தையும் கவலைப்பட வைத்துள்ள வகுப்புவாத வன்முறைகளை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் 75 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். ஏறக்குறைய 4 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் மற்றும் 8 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இயற்கையை வழிபடுவோரும் அந்நாட்டில் உள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.