2013-06-25 15:52:06

திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை


ஜூன்,25,2013. கிறிஸ்தவராய் இருப்பது அன்பின் குரலுக்குப் பதிலளிப்பதாய், இறைவனின் பிள்ளைகளாக மாறுவதற்கு அழைப்பு விடுப்பதாய் இருக்கின்றது என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை மற்றும் துன்பங்கள் மத்தியிலும் நம்மை முன்னோக்கி நடக்குமாறு அவர் சொல்கிறார் என்ற உறுதி கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.
இப்பூமியை ஆபிராமுக்கும் அவரது உறவினர் லோத்துக்கும் இடையே பிரிப்பது குறித்த கலந்துரையாடலை விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை(தொ.நூ.13:2,5-18)மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இப்பகுதியை வாசித்தபோது மத்திய கிழக்குப் பகுதி பற்றிய நினைவு தனக்கு வந்ததாகவும், போரை அல்ல, அமைதியின் ஞானத்தை நம் அனைவருக்கும் அருளுமாறு செபிப்போம் எனவும் கூறிய திருத்தந்தை, இறைவன் ஆபிராமுக்கு வாக்குறுதி கொடுத்து அவர் தனது இடத்தைவிட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம், ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறோம் என்றும், எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை என்றும், நாம் பெயர் சொல்லி, வாக்குறுதியோடு முன்னோக்கிச் செல்ல அழைக்கப்படுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் என்று இறைவன் நம்மிடம் கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.