2013-06-25 15:55:39

சிரியாவில் இடம்பெறும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு புனிதபூமிக் காவலர் அழைப்பு


ஜூன்,25,2013. அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புனிதபூமிக் காவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் Pierbattista Pizzaballa, சிரியாவில் இடம்பெறும் அர்த்தமற்ற மற்றும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அருள்பணியாளர் Muradன் இறப்பு குறித்துப் பேசிய சிரியா பேராயர் Jacques Behnan Hindo, மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களின் வரலாறு முழுவதும் பல வன்முறைகளுக்கு உள்ளான மறைசாட்சிகளின் இரத்தத்தால் குறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வட சிரியாவின் Gassaniehவிலுள்ள புனித பதுவை அந்தோணியார் பிரான்சிஸ்கன் இல்லத்தில் அடைக்கலம் தேடியிருந்த 49 வயது அருள்பணியாளர் Murad இறந்ததற்கான சூழல் குறித்த முழுவிபரங்கள் இன்னும் தெரியாத நிலையில், புரட்சியாளர்கள் அந்த பிரான்சிஸ்கன் இல்லத்தைத் தாக்கினர் என உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன.
அருள்பணியாளர் Murad, குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர் Gassanieh என்ற கிராமத்தில் புனித Simon Stylites துறவு இல்லத்தைக் கட்டி வந்தார். ஆயினும் அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளானதால் இவர் அக்கிராமத்தின் புனித பதுவை அந்தோணியார் பிரான்சிஸ்கன் இல்லத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
இஞ்ஞாயிறன்று இந்த இல்லம் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டபோது அங்கு அருள்பணியாளர் Murad மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.