2013-06-24 17:00:43

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஜூன்,24,2013. விசுவாசத்திற்காக வன்முறைத் துன்பங்களை அனுபவிக்கவில்லை எனினும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், மறைசாட்சிகளைப்போல் கிறிஸ்துவுக்காக தங்கள் வாழ்வையே இழக்கத் தயாராக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த காலங்களிலும் தற்போதும் தங்கள் விசுவாசத்திற்காக சிறைவைக்கப்படுவோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோரின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே செல்கிறது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்ததிருத்தந்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது விசுவாசத்திற்காகக் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றார்.
‘தங்கள் வாழ்வை காத்துக்கொள்ள விரும்புபவர்கள் அதை இழந்து விடுவர், மாறாக அதை என்பொருட்டு இழப்பவர்களோ காத்துக்கொள்வர்' என்ற இயேசுவின் வார்த்தைகளை மையக்கருத்தாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, வாழ்வை இழப்பது என்பது சித்ரவதைகள் மூலம் மட்டுமல்ல, பிறரின் நல்வாழ்வுக்கென அர்ப்பணிப்பதையும் குறிப்பிடும் என்றார்.
ஒவ்வொரு நாளூம் தங்கள் குடும்பத்தின் நன்மைக்கென தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து வாழும் பெற்றோர் பற்றியும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
இறையரசின் சேவைக்கென தங்களை அர்ப்பணிக்கும் குருக்கள், துறவியர் பற்றியும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கென தங்களை அர்ப்பணிக்கும் இளையோர் பற்றியும் குறிப்பிட்டத் திருத்தந்தை, உண்மைக்குச் சேவைபுரிபவர்கள், இயேசுவுக்கே சேவைபுரிகின்றார்கள் என்றார்.
இயேசுவின் பாதையில் ஒத்திணங்கிச் செல்லாத இன்றைய காலத்தின் மதிப்பீடுகளை துணிச்சலுடன் எதிர்த்து, நல்வாழ்வை மேற்கொள்ள இளையோர் முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.