2013-06-22 16:20:13

திருத்தந்தை பிரான்சிஸ் : செல்வங்களும் உலகக் கவலைகளும் இறைவார்த்தையை மூச்சுத் திணற வைக்கின்றன


ஜூன்,22,2013. செல்வங்களும் உலகக் கவலைகளும் இறைவார்த்தையை மூச்சுத் திணற வைக்கின்றன, அவை கடந்த காலத்தை மறக்கச் செய்து, நிகழ்காலத்தை நாம் ஏற்காமல் வைத்து, நமது எதிர்காலத்தை உருக்குலைக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை (மத்.6,24-34) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வுலகச் செல்வத்தின்மீது நமது வாழ்வை அமைக்காமல் கடவுளின் வாக்குறுதி, அவரது உடன்படிக்கை, அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தது ஆகிய மூன்று தூண்களின்மீது நமது வாழ்வு அமைய வேண்டும் என்று கூறினார்.
செல்வங்களும் உலகக் கவலைகளும் இறைவார்த்தையை மூச்சுத் திணற வைத்து அது வளரவிடாமல் செய்கின்றன, இறுதியில் அது இறந்துவிடும் என்றுரைத்தார் திருத்தந்தை.
நமது வாழ்வு முழுவதும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று தூண்கள்மீது அமைய வேண்டும், ஆண்டவரின் தேர்வு கடந்த காலம், ஆண்டவரால் அளிக்கப்பட்ட வாக்குறுதி நோக்கி நடப்பது எதிர்காலம், நம்மைத் தேர்வு செய்துள்ள நல்ல கடவுளுக்குப் பதிலளித்து வாழ்வது நிகழ்காலம் என்று விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செல்வத்தை வணங்கும் உலகக் கவலைகளில் ஆழ்ந்துவிடும் தவறை நாம் செய்யாதிருக்கும் அருளை இறைஞ்சுவோம், நம்மைத் தேர்ந்தெடுத்துள்ள ஒரு தந்தை இருக்கிறார் என்பதை எப்போதும் நினைவுகூருவோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலியில் கியூபா நாட்டு சாந்தா கிளாரா பேராயர் அர்த்தூரோ கொன்சாலெஸ் மற்றும் வத்திக்கான் அருங்காட்சியகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.