2013-06-22 16:31:09

ஆசிய-பசிபிக் பகுதியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசுகளுக்கு ஐ.நா.அழைப்பு


ஜூன்,22,2013. இந்தோனேசியாவின் சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட தீயால், ஆசிய-பசிபிக் பகுதிகளிலுள்ள நகரங்களில் புகைமூட்டம் மிக அதிகமாக இருக்கும்வேளை, இப்பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசுகள் இன்னும் தீவிரமாகப் பணிகளை முடுக்கிவிடுமாறு அப்பகுதியின் ஐ.நா.அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தோனேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட பகுதிகளில் காற்று மாசுக்கேடு தொடர்ந்த பிரச்சனையாக இருந்துவருவது அந்நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று ESCAP என்ற ஆசிய-பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அவையின் செயலர் Noeleen Heyzer கூறினார்.
எல்லைகளைக் கடந்து மாசுக்கேடு ஏற்படுவது அரசியல்ரீதியாக சிக்கலானது என்றும், இது நிர்வாக மற்றும் அரசியல் எல்லைகளையும் கடந்தது என்பதால், காற்று, தண்ணீர் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பை நிர்வகிப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று Heyzer கேட்டுக்கொண்டார்.
வாகனங்கள், தொழிற்சாலைகள், மின்சாரம் போன்றவற்றால் ஏற்படும் காற்று மாசுக்கேட்டால் ஆசிய நகரங்களில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 5 இலட்சம் இறப்புகள் இடம்பெறுகின்றன என்று ESCAP அமைப்பு கணித்துள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியில், 170 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்கு சாணம், விறகு, வைக்கோல், நிலக்கரி போன்றவற்றையே இன்னும் சார்ந்து வாழ்கின்றனர்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.