2013-06-22 16:27:44

அரசு விவகாரங்களில் திருஅவை பங்கெடுக்கலாம், ஆயர்


ஜூன்,22,2013. பிலிப்பீன்சில் திருஅவையையும் அரசையும் பிரிப்பது குறித்த அரசியல் அமைப்பு பற்றிய விவாதங்கள் இடம்பெற்றுவரும்வேளை, பெரும்பாலான மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் பொதுவான கொள்கைகள் குறித்து திருஅவை பேசவும், தனது கருத்தை வெளிப்படுத்தவும் உரிமை கொண்டுள்ளது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
அந்நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் விவாதங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த மனிலா துணை ஆயர் Broderick Pabillo, திருஅவையின் அதிகாரிகள் நாட்டின் குடிமக்கள் என்ற முறையில், பொது விவகாரங்களில் பங்கு கொள்வதன் மூலம் தங்களது சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றனர் என்று கூறினார்.
திருஅவையையும் அரசையும் பிரிப்பதால், நாட்டுமக்களை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளின் தவறுகளை விமர்சிப்பதற்கு குருகுலத்துக்கு அனுமதி கிடையாது என்ற நிலை இல்லை, ஏனெனில் குருகுலத்தாராகிய தாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் என்பதால் அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்குத் தாங்கள் அனுமதிக்கப்படுகிறோம் என்றும் ஆயர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.