2013-06-21 16:16:55

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துமதத் திருப்பயணிகளுடன் இந்திய ஆயர்கள் ஒருமைப்பாட்டுணர்வு


ஜூன்,21,2013. வட இந்தியாவில் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருடனும் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.
உத்தர்கண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள இந்துமதத் திருப்பயண இடங்கள் பல, வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும்வேளை இங்குச் சென்ற பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகளும் கிராமத்தினரும் தவித்து வருகின்றனர். தேசியப் பேரிடர் மீட்பு படையினர், துணை இராணுவப் படையினர் உட்பட பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு ஆயர்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் செய்தியை வெளியிட்டுள்ள இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் ஆல்பர்ட் டி சூசா, இந்த இயற்கைப் பேரிடரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
மறைமாநில காரித்தாஸ் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழியாக இந்தியத் திருஅவையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறது.
இப்பேரிடரில் 207 பேர் இறந்துள்ளனர் மற்றும் இதில் 50 ஆயிரம் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகின்றது. கேதார்நாத்திலுள்ள பல புனித இடங்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.