2013-06-21 16:11:01

திருத்தந்தை பிரான்சிஸ் : உண்மையான செல்வத்தின்மீது இதயங்களைப் பதியுங்கள்


ஜூன்,21,2013. அன்புகூரும் இதயத்தைப் பெறுவதற்கும், பயனற்ற செல்வங்களால் அடித்துச்செல்லாதபடி வாழ்வதற்கும் இறைவனிடம் அருள் கேட்போம் என்று இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறுவுலக வாழ்வுக்குள் நம்மை இட்டுச்செல்லும் உண்மையான செல்வத்தை மட்டும் நாம் தேட வேண்டும் என்று, இந்நாளின் நற்செய்திப் பகுதியை(மத்.6,19-23) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, உண்மையான செல்வம் குறித்து நாம் குழப்பம் அடையாதபடி கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் ஆபத்தான செல்வங்களும் இருக்கின்றன, ஆனால் அவை பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வுலக வாழ்வில் சேர்க்கப்படும் செல்வங்கள் மரணத்தால் அழிக்கப்படும் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் பிறருக்குக் கொடுக்கும் செல்வங்களே நமது வெகுமதியாக இருக்கும், அவற்றையே நாம் எடுத்துச் செல்வோம், அவை இயேசு கிறிஸ்துவில் நமக்குக் கிடைக்கும் வெகுமதி என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அன்பு, பிறரன்பு, சேவை, பொறுமை, நன்மைத்தனம், கனிவு ஆகிய அழகான செல்வங்களை நாம் நம்மோடு எடுத்துச் செல்வோம் என்றும் கூறினார்.
உடலில் பிரதிபலிக்கும் இதயத்தின் எண்ணங்களின் அடையாளமாக கண் இருப்பது பற்றியும் உரையாற்றிய திருத்தந்தை, இன்று திருஅவை சிறப்பிக்கும் புனித அலாய்சியஸ் கொன்சாகாவின் பரிந்துரை வழியாக புதிய இதயத்தை ஆண்டவரிடம் கேட்போம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.