2013-06-20 15:50:23

புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கையில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 46 விழுக்காடு - ஐ.நா. அறிக்கை


ஜூன்,20,2013. சிரியாவில் நடைபெற்றுவரும் போரினால் புலம் பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், 1994ம் ஆண்டுக்குப் பின், கடந்த ஆண்டில்தான் மிக அதிக அளவில் மக்கள் புலம் பெயரும் கட்டாயத்திற்கு உள்ளக்கபட்டுள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
ஜூன் 20, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் நாளையொட்டி, UNHCR எனப்படும் ஐ.நா. அமைப்பு இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில், 2011ம் ஆண்டு 4 கோடியே 25 இலட்சமாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 2012ம் ஆண்டு, 4 கோடியே 52 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
போர்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சிரியா மற்றும் சூடான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் 55 விழுக்காட்டு மக்களை உருவாக்கியுள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புலம் பெயரும் மக்கள் குறித்த எண்ணிக்கைகள் பெரும் கவலையைத் தருகிறது என்றும், இந்தப் பிரச்சனைகளுக்கு வெகு விரைவாகத் தீர்வுகள் காண்பது மனித சமுதாயத்தின் தார்மீகக் கடமை என்றும் UNHCR அமைப்பின் தலைவர் António Guterres கூறினார்.
புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கையில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 46 விழுக்காடு என்றும், பெற்றோரும் உற்றாரும் அற்ற 21,300 குழந்தைகள் கடந்த ஆண்டு புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும் வருத்தம் தரும் தகவல்களும் இப்புதனன்று வெளியான ஐ.நா.வின் அறிக்கையில் காணப்படுகின்றன.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.