2013-06-20 15:42:21

நாம் செபிக்கும்போது, கடவுளை 'எங்கள் தந்தை' என்று அழைக்கிறோம், 'என் தந்தை' என்றல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,20,2013. இயேசு கற்றுத்தந்த உன்னத செபத்தில் 'எங்கள் தந்தையே' என்று நாம் சொல்கிறோமே தவிர, 'என் தந்தையே' என்று கடவுளை ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமைப் பொருளாகக் கொண்டாடுவது இல்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை ஆற்றியத் திருப்பலியில், இயேசு கற்றுத் தந்த அற்புதச் செபத்தை தன் மறையுரையின் மையக் கருத்தாக்கினார் திருத்தந்தை.
நாம் மன்றாடும் கடவுள் விண்வெளியில் அணுகமுடியாத தூரத்தில் இருக்கும் கடவுள் அல்ல, மாறாக, நம்மை எப்போதும் நெருங்கி வாழும் தந்தை என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தை என்ற இச்சொல் மிக ஆழமான உணர்வுகளைத் தருகின்றது என்றும், முக்கியமாக, நமது கடவுள் நம் வாழ்வுப் பயணத்தில் நம்மோடு உடன்வருபவர் என்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கிக் கூறினார்.
"நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்" என்று நற்செய்தியில் இயேசு கூறியுள்ள வார்த்தைகளைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, செபம் என்பது மந்திர மாயம் அல்ல, பொருள் தெரியாத வார்த்தைகள் கொண்டு இறைவனிடம் வேண்டுவது தேவையற்றது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அடுத்தவரோடு ஒப்புரவு இல்லாமல், கடவுளை 'தந்தை' என்று அழைக்கமுடியாது என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, எனவேதான், இச்செபத்தின் இறுதியில், உடனடியாக, மன்னிப்பைக் குறித்து இயேசு அறிவுரை வழங்கியுள்ளார் என்பதையும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.